Last Updated : 11 May, 2018 08:40 AM

 

Published : 11 May 2018 08:40 AM
Last Updated : 11 May 2018 08:40 AM

வணிக நூலகம்: உண்மைக்கு மூன்று கண்கள் !

ந்த ஒரு நிகழ்வுக்கோ, செயலுக்கோ, பொருளுக்கோ இரண்டு பக்கங்கள் இருப்பதாக தர்க்கம் கூறுகிறது. உண்மை / பொய், வெளிச்சம் / இருட்டு, நேர்மறை / எதிர்மறை என்பது போன்று இரண்டு பக்கங்களை கூறிக்கொண்டே போகலாம். இவை பெரும்பாலும் வெற்றி தோல்வியில்தான் முடியும். அதிலும், வெற்றி ஒரு புறம் தோல்வி மறுபுறம் என்ற கணக்கில்தான் இருக்கும். ஆனால் லிசா ஏர்லி மெக்லியாட் (Lisa Earle Mcleod) என்ற நூல் ஆசிரியர் மிக அருமையான கருத்துகளை நமக்கு தெரிந்த ஆனால் நாம் பெரிதும் பயன்படுத்தாத சிலவற்றை நம்முடைய இரண்டு கண்களுக்கு முன் கொண்டு வருகிறார். இந்த மூன்றாவது கண் மிகச் சரியாக பிரச்சினைகளைத் தீர்த்து, குழப்பங்களைத் தெளிவுபடுத்தி இருவருக்கும் வெற்றியை அளிக்கிறது. உதாரணமாக, ஒரு குளிர்பானம் அருந்தச் செல்லும்போது இரண்டு நண்பர்கள் எதிர்பாராத விதமாக ஒரே குளிர்பானத்தைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், அந்த கடையில் இருப்பதோ ஒன்றே ஒன்று. இரண்டு என்ற வரிசையில் சென்றால் ஒருவர் வெற்றி பெறுவார் மற்றவர் தோல்வி அடைவார். ஆனால் மூன்று என்ற பாணியில் சென்றால் இரண்டு பேரும் வெற்றியடைவார்கள், இரண்டு பேரும் மகிழ்ச்சியடைவார்கள். இது ஒரு பெரிய கம்ப சூத்திரம் அல்ல ஆனால் குறுகிய கண்ணோட்டத்தோடு இருப்பவர்களுக்கு இது தெளிவாக புலப்படாமல் போகும். மாறாக, ஒரே குளிர்பானத்தை இருவரும் பங்கிட்டு பருகும் பொழுது இருவருக்கும் தேவைகள் தீரும். மகிழ்ச்சி மலரும். ஒருவருக்கொருவர் புரிதல் தோன்றும்.

மூன்றாவது அணுகுமுறை

சாதாரணமாக ஒரே ஒரு குளிர்பானத்தை வைத்துக் கொண்டு இருவரில் ஒருவர் அதைப் பருகினால் மற்றவருக்கு ஏமாற்றமும் அடுத்த நபர் மீது வெறுப்பும் பதிவாகும். ஆனால், மாறுபட்ட இந்தச் சூழ்நிலையில் குழப்பங்கள், வெறுப்புகள் மாறி இருவரும் புரிதலைக் கூட்டுகிறார்கள். அந்தக் கூடுதலான புரிதல் மகிழ்ச்சியின் மலர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. இருவரும் அதை உணர வேண்டும்.

முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு வெற்றியும், புரிதலும், மகிழ்ச்சியும் கண்ணுக்கும், மனதிற்கும் தெரியாது. ஆனால், மூன்றாவது கருத்தை பிடிப்பவர்கள் மேலே சொன்ன மூன்றையும் நேர்மறையாக்கி கொள்வார்கள். நீண்ட நேர சண்டையில் சக்தி, ஆக்கம், ஊக்கம், எழுச்சி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் புதைந்து விடும். அவ்வாறு இல்லாமல் அவை அனைத்தும் ஒரு சேர இருவரும் வெல்லும் சூழல் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். சொல்லுவது சுலபம். பின்பற்றுவதும் நடைமுறைப்படுத்துவதும் கடினம். இந்த மூன்றாவது அணுகுமுறையை கற்றுக்கொள்பவர்களுக்கு வாழ்க்கை முறைகள் வித்தியாசப்படும்.

புதிதாய் பார்த்தல்

குழப்பங்களைத் தீர்க்க உதவும் ஒரு உத்தியாக இருவரும் வெல்வது என்ற உத்தி எல்லோருக்கும் கைவந்த கலையாகாது. சுயநலத்தைத் தூக்கி எறியவேண்டும். நியாய மற்றும் அநியாயத்தை சீர்தூக்கிப் பார்த்து இருவருக்கும் பொதுவான நியாயமான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

யார் ஒருவர் அடுத்தவரைப் பற்றி கருத்திலும், மனத்திலும் ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மூன்றாவது இலக்கை “முன்னேற்ற இலக்காக” மாற்றி தரும். ஒவ்வொரு சூழலிலும் நாம் சந்திக்கும் நபர்களை புதியவர்களாக அல்லது யாரோடும் தொடர்பு படுத்தாமல் பார்க்கும் பொழுது தான் மூன்றாவது உத்தி உண்மையில் வேலை செய்யும். இல்லை என்றால் புதிதாக பார்க்கும் ஒரு நபர் நமக்கு தெரிந்த எதிர்மறை விளைவுகளோடு கூடிய குணாதிசயங்களின் வெளிப்பாடாகத் தெரிகிறார்.

எது மூன்றாவது கண்?

எப்பொழுதும் முன் அனுபவங்களை, முன் பார்த்த மனிதர்களை பின்புலத்தில் கொண்டு எதிரில் இருப்பவரை எடை போடும் பொழுது கெட்டவராக மட்டுமே தெரிவார். ஏனென்றால், நமது எண்ண அலைகள் கொண்டு வந்து சேர்க்கும் கெட்ட நபரின் குணாதிசயங்களை புதிய நபரோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் பற்றிய முக்கியமான தரவுகள் இல்லாமலேயே எதிர்மறை முடிவுகளை மேற்கொள்கின்றோம். பூவா, தலையா, காயா, பழமா என்ற இரட்டை தரவுகளை தவிர்த்து அதற்கும் மேலே மூன்றாவது காரணியை முனைந்து பின்பற்ற வேண்டும். சுருங்கக் கூறின் நேர்மறையாக பார்க்கும் பொழுது இணைந்து கொள்கின்றோம். எதிர்மறையாக பார்க்கும் பொழுது நட்பை இழந்துவிடுகின்றோம். எதிர்மறையாக பார்க்கும் பொழுது நாய் மட்டும்தான் தெரிகின்றது. நேர்மறையாக பார்க்கும் பொழுது கல் மட்டுமே தெரிகின்றது. இரண்டை தவிர மூன்றாவதாக ஒரு புலன் காட்சி உருவாகும் ஆனால் அது செக்கு மாட்டு எண்ணங்களுக்கு விடை கொடுத்து சுதந்திர சிந்தனைகளைக் கூட்டு சேர்க்கும்.

உண்மையைத் தேடும்பொழுது மற்றவர்களை முன்பே தெரிந்த காரணிகளோடோ குணாதிசயங்களோடோ நபர்களோடோ பிணைத்துப் பார்க்கக் கூடாது. அவர்களுடைய எழுச்சி, மெய்பாடு, புலன்காட்சி, நடைமுறைகள் ஆகியவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உண்மையையும், நியாயத்தையும் சீர்தூக்கி பார்த்தால் அதுவே மூன்றாவது கண் என்றால் மிகையாகாது.

வெற்றி வெற்றி

மேலும் மூன்றாவது கண் கொடுக்கும் திருப்தி, மகிழ்ச்சி இருவருக்கும் பொதுவாக இருப்பதால் வெற்றி வெற்றி என்ற இலக்கை இருவரும் அடைகிறார்கள். எப்பொழுது ஒரு நிகழ்வில் இருவருக்கும் வெற்றி சாத்தியப்படுகிறதோ அந்த இடத்தில் தோல்விக்கு வேலை இல்லை. அதில் மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தோல்விக்கு வேலையில்லை என்றால், குழப்பங்களும், ஒருவர் நியாயவானாக இருப்பதும், மற்றவர் கழிசடையாகத் தோன்றுவதும் நடைபெறாது. மகிழ்ச்சி மலரும் பொழுது இருவரும் முன்னேற்றத்தைப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே இருந்த தீமைகள், புரிதல் அற்ற நிலை, குழப்பங்கள், எரிச்சல் ஆகியவற்றைத் தவிர்த்து இருவருக்கும் பொதுவான மூன்றாவது கண் பல நன்மைகளை செய்கின்றது.

இதைக் கூறும் பொழுது நூல் ஆசிரியர் மிகத் தெளிவாக கூறுகிறார். எல்லோரும் கெட்டிக்காரர்களாக இருக்கும் பொழுது நான் மட்டும் மூன்றாவது கண்ணை வைத்துக் கொண்டு பைத்தியக்காரராக முடியுமா என்று ஆழ்மனதில் கேள்வி எழும். ஆனால் கற்றல், வெற்றி, சாதனை, புதுமை புகுத்துதல் ஆகிய அனைத்தும் முதல் தோல்வியில் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவிக்கிறது.

அதே போல நீங்கள் சூழலில் சிக்காமல் சூழலில் சிக்கியவர்களை வெளியில் கொண்டுவரும் பொழுது ஏற்படும் உணர்வுகளை உணரத்தான் முடியும் எழுத முடியாது. எல்லாவற்றையும் எழுதித்தான் புரிய வைக்க வேண்டும் என்றால் புரிதல் கடினம். ஆனால், உணர்வது எளிது நீங்கள் உணரும் பொழுது அடுத்த முறை மற்றவர்களும் உங்களோடு வருவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைகின்றது.

அதனால் வெற்றி, தோல்வி, இழப்பு அடைவது என்பவை இல்லாமல் எல்லோரும் வெற்றியடையவும், எல்லோரும் மூன்றாவது கண்ணை உபயோகப்படுத்தும் பொழுது மன மலர்ச்சியும், மகிழ்ச்சியும் மணம் வீசும். எங்கே கொஞ்சம் முகர்ந்து தான் பாருங்களேன்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x