Published : 16 Aug 2014 09:23 AM
Last Updated : 16 Aug 2014 09:23 AM

இந்தியாவில் தயாரித்து எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யுங்கள்: வெளிநாட்டினருக்கு மோடி அழைப்பு

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

டெல்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை 68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர், சர்வதேச தொழில் நிறுவனங்கள் இந்தியாவி்ல் ஆலைகளை அமைத்து, இந்தியா விலிருந்து உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி நிகழ்த்தும் முதலாவது சுதந்திர தின உரை இதுவாகும். இந்தியாவிலுள்ள இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும், இங்கு உற்பத்தியாகும் பொருள்கள் 100 சதவீதம் பழுதற்றவைகளாக (ஜீரோ டிபெக்ட்) உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியா மிகச் சிறந்த ஏற்றுமதி நாடாக உருவாகும் என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்து இங்கிருந்து உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்றார். இங்கு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகள் குறிப்பாக மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்கின்றன, எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுக் கலாம். மின்னுற்பத்தி, மின்னணு தொழிற்சாலை, ரசாயனம், மருந்து தயாரிப்பு, செயற்கைக்கோள் மற்றும் நீர்மூழ்கி என எந்த தொழிற்சாலையையும் அமைக் கலாம் என்றார்.

இந்தியாவில் அபரிமிதமான இளைஞர்கள் வளம் உள்ளது. தொழில் திறமையுள்ள, படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இதைப் பயன்படுத்தி இந்தியாவை சிறந்த ஏற்றுமதி நாடாக உருவாக்க வேண்டும் என்று அவர் வெளிநாட்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்திய தயாரிப்புகள் உலகின் எந்தப் பகுதியிலும் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இதை நனவாக்க அனைத்து இளைஞர்களும் உறுதிபூண்டு செயல்பட வேண்டும் என்றார். இளைஞர்கள் உற்பத்தித் துறையில் ஈடுபட வேண்டும். முதல் கட்டமாக சிறிய தொழிலகங்களை அமைக்கலாம் என்று மோடி கூறினார்.

இளைஞர்கள் ஏதேனும் ஒரு புதிய பொருளை உருவாக்கினால் அது நமது இறக்குமதி செலவை பெருமளவு குறைப்பதாக இருக்கும். அதேபோல ஏற்றுமதி செய்தால் நமக்கு வருவாய் கிடைக்கும். எனவே இளைஞர்கள் உற்பத்தித் துறையில் ஈடுபட வேண்டியது அவசியம் என்றார்.

பொதுவாக மக்கள் இரண்டு விஷயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொருள் களில் பழுது இருப்பது மற்றும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. எனவே நூறு சதவீதம் பழுதற்ற, பாதிப்பற்ற பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

பழுதற்ற பொருள்களைத் தயாரித்தால் அவற்றை எந்த நாட்டினரும் நிராகரிக்க மாட்டார்கள். இதனால் சர்வதேச சந்தையில் நமது தயாரிப்புகளுக்கு மிகுந்த மதிப்பும் கிராக்கியும் உண்டாகும். தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் அதேசமயம் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் இந்தியா வுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்றாலே பாம்பு பிடிப் பவர்களும் மந்திரவாதிகளும் நிறைந்த நாடு என்ற தோற்றம்தான் வெளிநாட்டினர் மத்தியில் இருந்தது. ஆனால் கடந்த 23 ஆண்டுகளில் இந்த தோற்றத்தை இளம் தலை முறையினர் முற்றிலுமாக மாற்றி விட்டனர்.

இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மின்னணு பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த விஷயத்திலும் இளைஞர்கள் கவனம் செலுத்தி இந்தியாவையும் டிஜிட்டல் இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்றார்.

கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக மின்னணு பொருள்கள்தான் இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதைக் குறைக்க மின்னணு பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்.இதன் மூலம் இறக்குமதி செலவு குறையும் என்றார் மோடி.

தொழில்துறையினர் வரவேற்பு

வெளிநாட்டு தொழில் நிறுவனங் களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

பொருள் உற்பத்தி செய்வதன் மூலம்தான் வேலை வாய்ப்பைப் பெருக்க முடியும். வெளிநாட்டு நிறுவனங்களின் வரவால் வர்த்தகம் விரிவடையும் என்று சிஐஐ குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க வேண்டுமாயின் சில பிரதான விஷயங்கள் தீர்க்கப் பட வேண்டும். குறிப்பாக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் எளிமையாக்கப்பட வேண்டும். திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். என்று சிஐஐ குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x