Published : 19 May 2018 08:28 AM
Last Updated : 19 May 2018 08:28 AM

தொழில் ரகசியம்: மார்க்கெட்டிங் என்பது மருந்து மாதிரி...!

ன்றும் பிசினஸ் பற்றி தான் பேச உத்தேசம். குறிப்பாக பிசினஸ்மேன் பற்றி. தொழில் வளரவேண்டும் என்ற ஆசை எல்லாரிடமும் உண்டு. ஆனால் அதற்கு மார்க்கெட்டிங் தேவை, பொருளை கமாடிட்டி போல் இல்லாமல் பிராண்ட் ஆக்கவேண்டும், பிராண்டிங் செய்யவேண்டும் என்ற பிரக்ஞையே பலருக்கு இருப்பதில்லை. மார்க்கெட்டிங் அவசியத்தை, பிராண்டிங் அவசரத்தை எத்தனை தரம் கரடியாய் கத்தினாலும் பலர் கேட்பதே இல்லை. எழுத்தாளர் ‘சுஜாதா’ வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் அவர்களை பசித்த போட்டியாளர் புலி தின்னட்டும்!

இவர்கள் இப்படி என்றால் இன்னொரு டைப் தொழிலதிபர்கள் இதைவிட விசேஷம். எங்கேயோ, எப்படியோ மார்க்கெட்டிங் அருமை, பெருமைகளை கேட்டு இனி நாமும் மார்க்கெட்டிங் தத்துவப்படி பொருளை பிராண்டாக்குவோம் என்று ஞானோதயம் வந்து மார்க்கெட்டிங்கில் பிள்ளையார் சுழி போடுவார்கள். மார்க்கெட்டிங் ஆலோசகர் ஒருவரை தேடி பிடித்து ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர், இவர் பிழைச்சா போதும்’ என்று முறையிடுபவர்கள் போல் ‘என் பொருளை எப்படியாவது பிராண்டாக்கி மார்க்கெட்டிங் பண்ணுங்க’ என்பார்கள். ஒன்றிரண்டு மீட்டிங்குகள் கூட நடக்கும். ஆலோசகரும் கர்ம சிரத்தையாய் மார்க்கெட்டை கணக்கெடுத்து, பொருளை பிராண்டாக்க பிரம்மபிரயத்தனப்பட்டு மார்க்கெட்டிங் பிளான் போட்டுத் தருவார்.

ஆனால் அதை செயல்படுத்த தொழிலதிபர் தயங்குவார். தேவையில்லாத பயம் வரும். ‘நீங்க சொல்றதில இத மட்டும் செய்வோம், மத்ததெல்லாம் வேணுமா’ என்று இழுத்து கடைசியில் செய்ய துவங்கியதை மறப்பார், செய்ய வேண்டியதையும் மறுப்பார். ஆலோசகர் அம்போ என்று கழட்டி விடப்படுவார். மார்க்கெட்டிங் அனாதையாக்கப்படும். அன்றில்லை என்றாலும் சீக்கிரமே தொழிலதிபரின் பிசினஸ் இழுத்துக்கொண்டு தத்தளிக்கும் போது ‘சே, பாழாய் போன மார்க்கெட்டிங் பண்ணியும் ஒரு எழவும் ஆகல’ என்று செய்யாத மார்க்கெட்டிங் மீது பழி போடுவார்.

மார்க்கெட்டிங்கின் மகத்துவம் இன்னமும் பல தொழிலதிபர்களுக்கு தெரியாமல் இருப்பது அக்மார்க் அக்கிரமம். ஐஎஸ்ஐ சோகம். அப்படியே லவலேசம் அதன் மகிமை புரிந்தாலும் அதை வாக்கிங் போவது போல், டயட்டில் இருப்பது போல் பாவித்து ‘கண்டிப்பாய் செய்யணும், அடுத்த வருடத்திலிருந்து துவங்கணும்’ என்று செய்ய வேண்டிய மார்க்கெட்டிங், பிராண்டிங் வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள். காலமும் கடல் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. கடைசியில் மார்க்கெட் சுழலில் சிக்கி, போட்டியாளர் பிடியில் இறுகி தொழில் இளைத்து பிராண்ட் உடல் மெலிந்து உருக்குலைந்து ஊர் போய் சேர்கிறார்கள்.

மார்க்கெட்டிங் புதுமை

`எந்த தொழிலுக்கும் ஆதாரமானது மார்க்கெட்டிங்கும், புதுமையான சிந்தனைகளும்’ என்றார் நிர்வாக மேதை ‘பீட்டர் ட்ரக்கர்’. எத்தனை முறை இதை சொன்னாலும் இங்கே எத்தனை முறை எழுதினாலும் பலர் காதுகளில், மனதில் அது விழுவதே இல்லை. இன்று போல் என்றும் சாஸ்வதமாக, சௌக்கியமாக தங்கள் தொழில் நடக்கும், பிசினஸ் தழைக்கும், பிராண்ட் பிழைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் மார்க்கெட் என்ற இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்!

அது என்ன நேர்த்தி கடனோ, மார்க்கெட்டிங் செய்யமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்வது அல்லது செய்ய துவங்கினாலும் சாஸ்திரத்திற்கு கொஞ்சம் செய்துவிட்டு அதிலிருந்து லம்பாய் பயன் வேண்டும் என்று ஓவராய் ஆசைப் பட்டு அப்படி நடக்காத போது மொத்தமாய் மார்க்கெட்டிங்கை மறப்பது என்று பல தொழிலதிபர்கள் தங்கள் தொழிலின் வருங்காலத்தோடு விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டு வினையில் தான் முடியும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

மார்க்கெட்டிங்கை பலர் உபயோகிக்க மறுப்பதற்கு ஒரு காரணம் அதை பற்றிய அறியாமை. பல தொழிலதிபர்கள் மார்க்கெட்டிங்கை படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினாலும் ‘என்ன பெரிய புடலங்காய் மார்க்கெட்டிங், இதை செய்து தான் நான் இத்தனை நாள் பிசினஸ் செய்தேனாக்கும்’ என்பார்கள். அவர்கள் பிசினஸ் தழைத்த காலம் வேறு, அப்பொழுது மருந்துக்குக் கூட போட்டியில்லை, ஆளில்லாத ரோடில் ஹாண்டில் பாரை பிடிக்காமல் கையை விட்டு சைக்கிள் ஓட்டிய காலத்தில் பிசினஸ் செய்தோம், இன்று உயிரைப் பிடித்துக்கொண்டு தான் அதே ரோடில் நடக்கவே வேண்டியிருக்கிறது, படுகுழி நிறைந்த போட்டி யுகத்தில் பிசினஸ் செய்கிறோம் என்பது தானாகவும் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை.

நமக்கு ஒன்று தெரியவில்லை என்பதால் மட்டுமே அது தவறாகிவிடாது. ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத ஒன்றாகிவிடாது. மார்க்கெட்டிங் அறியாமையின் வெளிப்பாடு தான் அதன் மீது பலருக்கு இருக்கும் அபரிமிதமான பயம். மார்க்கெட்டிங் என்றால் செலவு’ என்று நினைக்கிறார்கள். இது அக்கிரமத்திற்கு அயோக்கியத்தனம். மார்க்கெட்டிங் என்றால் விளம்பரங்கள் என்ற தவறான எண்ணமே இந்த பயத்திற்கு காரணம். மார்க்கெட்டிங் என்கிற ஐஸ்பெர்க்கின் முனை தான் விளம்பரம். கடலுக்கு மேல் ஐஸ்பெர்கின் முனை தெரிகிறது என்பதால் அது மட்டுமே மார்க்கெட்டிங் என்றாகிவிடாது. அதற்கடியில் மார்க்கெட்டிங் பனிமலை இல்லை என்றாகிவிடாது.

மார்க்கெட்டிங் என்றால் என்ன? நம் வாடிக்கையாளர் யார் என்பதை அறிந்து அவர் தேவை என்ன என்பதை புரிந்து மற்றவர்களை விட அதை பெட்டராக தீர்க்கும் வழிகளை தேடுவது. மார்க்கெட்டிங் என்பது ஒரு செயல் அல்ல, பல செயல்கள் கொண்ட செயல்முறை. இதில் எங்கிருந்து வருகிறது செலவு? விளம்பரம் என்ற வார்த்தையே வரவில்லையே. பலர் அளிக்கும் அதே பொருளை, அதே தன்மைகளுடன் அளித்து, பிராண்ட் என்ற அந்தஸ்த்து கூட தராமல் தவிக்க விட்டு விளம்பரப்படுத்தி விற்க முனைந்தால் பொருள் விற்று விடுமா என்ன? விக்கிக்கொண்டு தான் நிற்கும். அதே போல் வாடிக்கையாளருக்கு தேவையான பொருளை உருவாக்கி அப்பொருளை பிராண்டாக்கும் செயல்களை செய்யாமல் விளம்பரப்படுத்துவதால் மட்டும் மார்க்கெட்டிங் செய்ததாக ஆகுமா?

செலவா முதலீடா?

மார்க்கெட்டிங் என்பது செலவு அல்ல, முதலீடு. மார்க்கெட்டிங்கை செலவு என்று உங்கள் அக்கவுண்டண்டோ ஆடிட்டரோ கூறினால் முதல் காரியமாக அவர்களை மாற்றுங்கள். ட்ரக்கர் சொன்னபடி மார்க்கெட்டிங் தத்துவங்களை உணர்ந்தவர்களை பணியில் அமர்த்துவது உங்களுக்கு நல்லது. உங்கள் தொழிலுக்கு உகந்தது. உங்கள் பிராண்டிற்கு ஏற்றது.

ஒரு பக்கம் மார்க்கெட்டிங் என்பது முதலீடென்றால் இன்னொரு பக்கம் மார்க்கெட்டிங் ஒரு ஆயுள் காப்பீடு. உங்கள் பிராண்டை போட்டியாளர் தாக்காத வண்ணம் நீங்கள் செலவழிக்கும் டிஃபென்ஸ் பட்ஜெட். உங்கள் இடத்தை தக்கவைக்க நீங்கள் செய்யும் செயல்களின் ஒரு அங்கம் மார்க்கெட்டிங். நீங்கள் மார்க்கெட்டிங் செய்வதை நிறுத்தினால் நாளடைவில் வாடிக்கையாளர் கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்குவீர்கள். நீங்கள் விழுந்து எழுந்து சுதாரித்து பார்ப்பதற்குள் நீங்கள் இருந்த இடம் நிரப்பப்பட்டு அதுவும் பத்தாமல் அந்த இடத்தைப் பிடிக்க ஒரு க்யூவே நிற்கும். நீங்களும் அந்த க்யூவில் நிற்கலாம். ஒரு காலத்தில் நீங்கள் இருந்த இடத்தை மீண்டும் ஒரு வேளை பிடிக்க. தேவையா இந்த கன்றாவி!

மார்க்கெட்டிங் செய்ய நேரமே கிடைப்பதில்லை என்று சிலர் கூற கேட்டிருக்கிறேன். ஃபேக்டரியை நடத்துவது முதல் பொருள் தயாரிப்பு வரை, உட்பொருட்கள் வாங்குவது முதல் ஃபைனான்ஸ் வரை ஏகப்பட்ட வேலை இருக்க மார்க்கெட்டிங் மீது கவனம் செலுத்த டயம் இல்லை என்பார்கள். அவர்களை ஒன்று கேட்கிறேன். காலை தூங்கி எழுந்ததிலிருந்து இரவு படுக்க போவது வரை ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும் போது எப்படி மூச்சு விட்டுக்கொண்டு என்று அதை கொஞ்சம் நிறுத்தினால் சங்கு சத்தம் கேட்குமா கேட்காதா? மார்க்கெட்டிங் செய்யாமல் இருந்தாலும் அதே சவுண்ட் தான்!

உயிர் மூச்சு

உங்கள் தொழிலின் உயிர் மூச்சு மார்க்கெட்டிங். தழைக்க மட்டுமல்ல, பிழைக்கவே பிரதானம் மார்க்கெட்டிங். இனியும் மார்க்கெட்டிங்கை மாற்றான் தாய் குழந்தை போல் பாவிக்காதீர்கள். டயம் கிடைக்கும் போது மார்க்கெட்டிங் செய்வது, செய்து விட்டு அடுத்த முறை நேரம் கிடைக்கும் வரை சும்மா இருப்பது என்று தொழில் செய்யாதீர்கள். மார்க்கெட்டிங்கிற்கு பிள்ளையார் சுழி போட்டு அதை தொடர்ந்து செய்யாமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல் உட்கார்ந்திருந்தால் நீங்கள் பிடிக்க முயலும் பிள்ளையார் குரங்காய் தான் முடியும்!

மார்க்கெட்டிங் என்பது மருந்து மாதிரி. கசப்பாகத் தான் இருக்கும். குமட்டிக்கொண்டு வரும். ஆனாலும் எடுத்துக்கொள்ளவேண்டும். பிராண்டிங் என்பது இன்ஜெக்‌ஷன் போல. வலிக்கும். வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும். இத்தனை சொல்லிய பிறகும் பிசினஸ் செய்தேன், கொஞ்சம் மார்க்கெட்டிங் செய்தேன் என்று கூறாதீர்கள். மார்க்கெட்டிங் மருந்தை முழுமையாக சாப்பிடுங்கள். பிறகு பாருங்கள். தொழிலோடு சேர்ந்து விஸ்வரூபம் எடுப்பீர்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x