புஷான் ஸ்டீல் நிறுவனத்தில் தணிக்கை நடத்த வங்கிகள் முடிவு

புஷான் ஸ்டீல் நிறுவனத்தில் தணிக்கை நடத்த வங்கிகள் முடிவு
Updated on
1 min read

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாடுகளை சுயேச்சையான தணிக்கை நிறுவனம் மூலம் தணிக்கை செய்ய அந்நிறு வனத்துக்கு கடன் அளித்துள்ள வங்கிகள் முடிவு செய்துள்ளன.

சின்டிகேட் வங்கியின் தலைவர் எஸ்.கே. ஜெயினுக்கு கடன் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நீரஜ் சிங்காலை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இதையடுத்து கடன் அளித்த வங்கி நிர்வாகிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தன்னிச்சையான தணிக்கை அமைப்பு மூலம் தணிக்கை செய்ய முடிவெடுக் கப்பட்டது.

தணிக்கை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் விரைவில் நியமிக்கப்படும்.வங்கிகள் அளித்த கடன் தொகையை இந்நிறுவனம் உரிய வழியில் செலவிட்டுள்ளதா? அல்லது கடன் தொகை வேறு பணிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளனவா என்பதை இந்த தணிக்கைக் குழு ஆராயும்.

இது தவிர, நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்பார்வையிட மூன்று நியமன இயக்குநர்களை நியமிக்க உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு 51 வங்கிகள் மொத்தம் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளன. இந்நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ. 6,000 கோடி அளித்துள்ளது.

நிறுவன முதலீட்டாளர்கள் கூடுதலாக முதலீடு செய்ய வலியுறுத்துவது என்றும், வருவாய் தராத சொத்துகளை விற்பனை செய்வது என்றும் வங்கிகள் முடிவு செய்துள்ளன. இருப்பினும், இப்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும், கடன் அளித்த வங்கிகள் பரிந்துரைத்தபடி வருவாய் தராத சொத்துகளை விற்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு எவ்வளவு காலம் தேவை என்ற உறுதியான கால வரையறையுடன் வருமாறு நிர்வாகத்துக்கு வங்கிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை திறமையான நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுவதால், இதுவரை உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in