

மதுரை: உளுந்தம் பருப்பு விலை உயர்வால் அப்பளம் தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அப்பளம் தயாரிப்பு மூலப்பொருளான உளுந்தம் பருப்பை மானிய விலையில் வழங்க தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பளம் தயாரிக்கும் தொழில் நாடு முழுவதும் சிறு தொழிலாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுமார் 770 குடிசை தொழில்களும், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 10-க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்களும் அப்பளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் தயாரிக்கப்படும் அப்பளம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு உளுந்தம் பருப்பின் விலை கிலோ ரூ.90 ஆக இருந்தது. தற்போது கிலோ ரூ.130 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பளம் தயாரிப்பு தொழில் மீண்டும் பழைய நிலைக்கு சென்று தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இதனால், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, அப்பளம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மூலப்பொருளான உளுந்தும் பருப்பை மானிய விலையில் வழங்கப்படும், என்று நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கும்படி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயபிரகாசம், தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்துள்னர்.