Published : 22 May 2018 08:50 AM
Last Updated : 22 May 2018 08:50 AM

ஆன்லைன் ராஜா 28: வழிகாட்டிய இந்தியர்

க்டோபர் 1999. ஷெர்லி உபயத்தில் வந்த முதலீடு 50 லட்சம் டாலர்கள். ஏப்ரல் 1999 – இல் அலிபாபா தொடங்கியபோது ஜாக் மாவும் அவர் 17 கூட்டாளிகளும் போட்ட ஆரம்பப் பணம் 60,000 டாலர்கள். ஆறே மாதங்களில் கோல்ட்மேன் சாக்ஸும், பிறரும் கொண்டுவந்த பணம் அதன் 83 மடங்கு!

ஜாக் மாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பண வரவால் அல்ல, தன் கனவுகளை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டது என்னும் திருப்தியால். ஜோ, ஜாக் மா போலவே துணிச்சல்காரர். ரிஸ்க் எடுப்பதில் மன்னர். இருவரும் அலிபாபாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றித் திட்டமிடத் தொடங்கினார்கள். முதலீட்டு உலகம் சீன ஆன்லைன் பிசினஸ் மீது வை ராஜா வை விளையாடத் தயாராக இருக்கிறது. இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவவிடக்கூடாது. அலிபாபாவின் அடுத்த செயல், நடையல்ல, ஓட்டமல்ல, புலிப்பாய்ச்சல்.

ஜாக் மாவும், ஜோவும் ஹாங்ஸெள தலைமை அலுவலகத்தைவிட ஹாங்காங்கில் அதிக நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள். ஜோ தலைவரிடம் சொன்னார், “அலிபாபா கம்பெனிக்கு ஹாங்காங்கில் கிளை திறக்கவேண்டும்.”

ஜோ தந்த காரணங்கள் - அலிபாபா இதுவரை கூட்டுப் புழுவாக இருந்தது. இப்போது, வண்ணத்துப் பூச்சியாக வானில் சிறகடித்துப் பறக்கவேண்டிய நேரம். இதுவரை செலவைக் குறைப்பதற்காக ஹாங்ஸெளவில் இருந்தாகிவிட்டது. உலகளவில் கொடிகட்டிப் பறக்க விரும்பும் கம்பெனி இந்தக் குண்டுச் சட்டியில் மட்டுமே குதிரை ஓட்டக் கூடாது. ஆசியாவின் நிதி, வணிகத் தலைநகரான ஹாங்காங் போகவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

ஜாக் மா சம்மதித்தார். ஜுலை 1999. ஹாங்காங்கின் முக்கிய பிசினஸ் வீதி. புத்தம் புதிய பலமாடிக் கட்டிடம். அதில் கண்ணாடியும், மார்பிளும் இழைத்த ஆபீஸ். ஜில் ஏசி. இந்தப் பகட்டும், ஆடம்பரமும் வெளியுலகத்துக்குக் காட்டும் முகம், ஜாக் மாவும் 17 கூட்டாளிகளும் இரவு பகலாக உழைத்தது பழைய எலிப் பொந்தில்தான். ஜாக் மாவைப் பொறுத்தவரை, வந்திருக்கும் 50 லட்சம் முதலீடு லாட்டரியல்ல, ஷெர்லி அலிபாபாவில் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் மாபெரும் பொறுப்பு. கம்பெனியை வேகமாக வளர்க்க வேண்டும். தொடங்கினார் மும்முர முயற்சிகள்.

அலிபாபாவுக்கு 28,000 கஸ்டமர்கள் இருந்தார்கள். இவர்கள் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகமாக்க வேண்டும். ஜாக் மாவைப் பொறுத்தவரை இதற்கு ஒரே ஒரு வழிதான். அவர்களின் அலிபாபா இணையப் பயணம் சுகானுபவமாக இருக்கவேண்டும். இணையத்தைச் சீரமைக்கும் வேலைகளை முடுக்கிவிட்டார். “ஆடை & பேஷன்”, “எலக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிக்கல்”, “தொழிற்சாலை ஐட்டங்கள்” என 27 பிரிவுகளை உருவாக்கி, 28,000 கஸ்டமர்களையும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களின் அடிப்படையில் பிரித்தார். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர் தொழில் தொடர்பான செய்திகள் ஈ மெயிலில். மூன்றே மாதங்கள். அக்டோபர் 1999. கஸ்டமர்கள் எண்ணிக்கை 40,000 – ஆக உயர்ந்தது.

இப்போது பல பிரச்சினைகள். 40,000 வாடிக்கையாளர்களைக் கையாள 18 கூட்டாளிகள் மட்டும் போதவில்லை. அலிபாபா இணையத்தில் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்தோர் சீன மொழி மட்டுமே தெரிந்தவர்கள். ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. பொருட்களை வாங்குவோர் ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியாத அமெரிக்கர்கள். கூட்டாளிகளில் நிறையப் பேருக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால், மொழிபெயர்ப்புப் புலமை இல்லை. இதனால், நம் ஊரில் சொல்வதுபோல், சுக்கு, மிளகு, திப்பிலி என்பதை சுக்குமி, ளகுதி, புலி என்று மொழிபெயர்த்தார்கள். ஒரே குழப்படி. ஜாக் மா ஆங்கிலமும், சீனமும் அறிந்த ஏராளமான திறமைசாலிகளை நியமித்தார்.

வேலை கிடைக்க என்ன தகுதி வேண்டும்? ஜாக் மா வகுத்த அளவுகோல்கள், “அனுபவம் சுத்தமாகத் தேவையில்லை. ஆரோக்கியம், நல்ல இதயம், நல்ல மூளை.” ஜாக் மா இன்னொரு புதுமையும் செய்தார். சேரும்போதே, புது ஊழியர்களுக்கு கம்பெனிப் பங்குகள் தரும் பழக்கம் அமெரிக்காவின் தொழில்நுட்பக் கம்பெனிகளில் மட்டுமே இருந்தது. சீனாவில் இல்லவே இல்லை. ஜாக் மா இந்தப் புதுமையை அறிமுகம் செய்தார். கைமேல் பலன். அலிபாபா இணையதளத்தில் சீக்கிரமே, தொழில் நேர்த்தி.

இத்தனை பேர் உட்கார 950 சதுர அடி போதவில்லை. 20,000 சதுர அடி புதிய அலுவலகத்துக்கு மாறினார்கள். ஹாங்காங், ஹாங்ஸெள இரு ஆபீஸ் வாடகைகள், புது ஊழியர்களின் சம்பளம் எனச் செலவுகள் எகிறிக்கொண்டிருந்தன.

அப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்துகொண்டு அலிபாபாவின் இணையதளத்தில் செயல்படும் சேவையை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கியது. பிற ஆன்லைன் கம்பெனிகள் அத்தனைபேரும் பதிவுக் கட்டணம், வருட அங்கத்தினர் கட்டணம் எனப் பலவகை வசூல் செய்தார்கள். இதேபோல் அலிபாபாவும் செய்யவேண்டும் என்று முதலீட்டாளர்கள் வற்புறுத்தல். ஜாக் மா மறுத்துவிட்டார். “வாடிக்கையாளர்களுக்கு அலிபாபா மூலமாக பிசினஸ் டீல்கள் கனிந்தால் மட்டுமே, விற்பனையாளர் கமிஷன் தரவேண்டும். அதுவரை அவர்களிடம் ஒரு காசும் வாங்கக்கூடாது.” லாபத்தைவிட வாடிக்கையாளர் சேவை முக்கியம் என்னும் அடிப்படைக் கொள்கையில் பிடிவாதம்.

அதே சமயம். 50 லட்சம் டாலர் இருக்கிறதே என்று ஜாக் மா ஆடம்பரமாக செலவு செய்யவில்லை. ஒரு காசு செலவழித்தாலும் அது அலிபாபாவின் வளர்ச்சிக்கு உதவவேண்டும்.

அலுவலகத்தை ஒட்டுமொத்தமாக ஹாங்காங்குக்கு மாற்றிவிடலாம், இரட்டை ஆபீஸ் செலவுகள் மிச்சமாகும் என்று பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். ஜாக் மா இதற்கும் மறுப்பு. பல காரணங்கள். அவர் மனைவி கேத்தியும் பிற 16 கூட்டாளிகளும் ஹாங்ஸெள நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். மாநகரமான ஹாங்காங்கில் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்த மீன்களாகத் தவிப்பார்கள். செலவைக் குறைப்பது முக்கியம்தான். ஆனால், சகாக்களின் ஆத்ம திருப்தி அதைவிட முக்கியம்.

ஜாக் மாவின் மறுப்புக்குப் பின்னால் இன்னொரு நடைமுறை நிஜம் இருந்தது. ஹாங்ஸெள சின்ன ஊர். ஆகவே, ஊழியர் சம்பளம் ஹாங்காங்கை விட மிகக் குறைவு. ஜாக் மாவே சொன்னார், “அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில்* புரோகிராமர்களின் வருடச் சம்பளம் 50,000 முதல் 1,00,000 டாலர்கள் வரை. அந்தச் சம்பளத்தில் ஹாங்ஸெளவில் எங்களுக்குப் பத்துத் திறமைசாலிகள் கிடைப்பார்கள்.” ஹாங்காங் பற்றியும் அவர் இப்படித்தான் கணக்குப் போட்டிருப்பார். பெரிய நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம். ஊழியர்கள் அடிக்கடி வேலை மாறுவார்கள். ஹாங்ஸெள போன்ற சின்ன ஊரில் இந்தப் பிரச்சினைகளே கிடையாது. ஜாக் மாவின் ஒவ்வொரு சீனச் செயல்பாட்டுக்கும் பின்னால் தர்க்கரீதியான சிந்தனை இருக்கும், அதுதான் ஜாக் மா.

பாலோ ஆல்ட்டோ, லாஸ் ஆல்ட்டோஸ், சான் பிரான்சிஸ்கோ, சான் ஹோஸ், ஸ்டான்ஃபோர்ட் போன்ற நகரங்கள். ஆப்பிள், ஹியூலட் பக்கார்ட், யாஹூ போன்ற தொழில்நுட்பக் கம்பெனிகள் இங்கேதான் இயங்கின. பின்னாளில் கூகுள், ஃபேஸ்புக் வந்ததும் இங்கேதான்.

இணையதள மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, புது ஊழியர்கள் நியமனம் எனப் பல குதிரைகள் ஓட்டினாலும், ஜாக் மா அதிகம் ரசித்துச் செய்தது மாநாடுகளில் உரையாற்றுதல். பத்திரிகை பேட்டிகள். தொலைக்காட்சி நேர்காணல்கள் என ஜாக் மாவுக்கு அழைப்புகளோ அழைப்புகள். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஆசிய இன்டர்நெட் பிசினஸ் மாநாடு நடத்தினார்கள்.

ஜாக் மாவுக்கு அழைப்பு. அவர் பேசினார், “எம்.பி.ஏ. படிப்பில் கிடைப்பது அறிவு. பிசினஸ் நடத்தத் தேவை விவேகம். தாங்கள் படித்ததை மறந்துவிட்டு வந்தால்தான் எம்.பி.ஏ - க்கள் பிசினஸில் ஜெயிக்கமுடியும்.” மழுப்பலே இல்லாத இந்த வெளிப்படைத்தன்மையால் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளையடித்தார். ஜாக் மாவிடம் இன்னொரு ஈர்ப்பு அவர் நகைச்சுவை. கூட்டம் முடிந்தபின் ஒரு நிருபரின் கேள்விக்குப் பதில் சொன்னார், “ஹார்வர்டில் படிக்க அப்ளை பண்ணினேன். அட்மிஷன் கிடைக்கவில்லை. மாணவர்களைப் படிப்பிக்க அவர்களே கூப்பிட்டார்கள்.”

உலகம் சுற்றும் வாலிபருக்கு இப்போது வழக்கமான பிரச்சினை, பணத்தட்டுப்பாடு. மாயாபஜார் சினிமா. “கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா.” என்று கடோத்கஜன் வேஷத்தில் எஸ். வி. ரங்காராவ் கலக்குவார்.

ஜோரான பேணி லட்டு, சுவையான சீனிப் புட்டு எல்லாமே லபக், லபக் என்று அவர் வாய்க்குள் பறக்கும், மாயமாய் மறையும். தொழில்நுட்பக் கம்பெனிகளும் இப்படித்தான். எத்தனை கோடிப்பணம் வந்தாலும், சீக்கிரமே சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். அலிபாபாவிலும் இப்படித்தான். கோல்ட்மேன் சாக்ஸும், பிறரும் கொண்டுவந்த 5 லட்சம் டாலர்கள் கரையத் தொடங்கியது.

அலிபாபா கரையேற உதவியவர் கூட்டா (Guta) என்னும் இந்தியர். ஹாங்காங்கில் நிதி ஆலோசகராக இருந்தார். அவரிடமிருந்து ஈ மெயில்.

எனக்குத் தெரிந்த ஒருவர் பீஜிங் வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறார். இந்தச் சந்திப்பு நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

ஜாக் மா அடுத்த ஃபிளைட் பிடித்தார். பீஜிங் போனார். அலிபாபா வரலாற்றில் முக்கிய திருப்புமுனை. ஜாக் மா சந்தித்த அந்த வி.ஐ.பி, ஜப்பானின் குபேரர், மாஸயூஷி ஸன் (Masayoshi Son). சுருக்கமாக மாஸா.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x