Published : 30 May 2018 08:37 AM
Last Updated : 30 May 2018 08:37 AM

முத்ரா திட்டத்தின் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கடன்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், முந்தைய அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த திட்டத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு சிறு தொழில் கடன்களை அளித்து அவர்களுக்கான சிறந்த பொருளாதாரப் பாதையை உருவாக்குவதாகும். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதுடன், சிறு தொழில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்கிற இந்த திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் அறிமுகம் செய்தார். சிறு நிறுவனங்கள், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் இந்த திட்டத்தின் மூலம் ரூ.2.53 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5.73 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த கடன் உதவி மூலம் நாடு முழுவதும் பலன் பெற்றவர்களுடன் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாடினார். இந்த கடன் திட்டம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படுவதால் இந்த கடனை வாங்கியவர்கள் அதனை முறையாக திருப்பி செலுத்தி விடுகின்றனர்.

25-30 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்குவதை நினைத்துப்பாருங்கள்., அரசியல் வாதிகள் அல்லது அரசியல்வாதிகளுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு நினைக்க மாட்டார்கள். அவர்கள் கடன்களை பயன்படுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால் அந்த கடன்களின் முடிவு சிறப்பானதாக இல்லை.

ஆனால் இப்போதைய அரசாங்கத்தில் கடன் அளிக்கும் நடைமுறைகளில் இடைத் தரகர்களுக்கு இடம் இல்லை. வங்கிகளில் இருந்து நேரடியாக பெண்களும் இளைஞர்களும் கடன் பெற்று தங்களது தொழிலை தொடங்கிவிட என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

சிறு தொழில்கள்

நான் சிறு தொழில்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் தலைமுறை தொழில் முனைவோரின் தொழில் திறமைகளை நம்புகிறேன். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று அவர்கள் தங்களது சொந்த நிதியில் தொழிலைத் தொடங்கலாம்.

முத்ரா திட்டத்தின் கீழ் அரசு ஏழை மக்களுக்கும், சிறு தொழில்களுக்கும் எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்குகிறது. புதிய தொழிலை தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும் இந்த திட்டத்தில் கடன் பெறும் வகையில் முத்ரா திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுய தொழில்களை உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்புகளை இரண்டு மடங்காக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 12 கோடி பயனாளிகள் ரூ.6 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர்.

இந்த 12 கோடி பயனாளிகளில் 28 சதவீதம் பேர், அதாவது 3.2 கோடி பயனாளிகள் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள். அவர்கள் இந்த திட்டத்தை தெரிந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். 74 சதவீதம் பேர் அதாவது சுமார் 9 கோடி பயனாளிகள் பெண்களாக உள்ளனர். இதில் 55 சதவீதம் மக்கள் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி சேர்ந்தவர்களாவர். இதில் புதிய தொழில்களை தொடங்கிவர்களும் இருக்கின்றனர்.

முன்னர் வங்கிகளின் கடன் வாங்க வேண்டும் என்றால் பணக்காரர்களாக இருக்க வேண்டும், அல்லது அவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஏழை மக்கள் வங்கிக் கடனிலிருந்து அந்நியப்பட்டு இருந்தனர். அவர்கள் மிக அதிகமாக வட்டிக்கு வெளியில் கடன் வாங்குபவர்களாக இருந்தனர். ஆனால் முத்ரா திட்டம் இளைஞர்களை வங்கிகளுடன் இணைத்துள்ளது.

பாரபட்சம் இல்லை

முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெறுவதில் எந்த பாரபட்சமும் கிடையாது. இதனால் இந்த திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. முத்ரா கடன் திட்டம் பல ஏழை குடிமக்களை நிதி சார்ந்த பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளது. இந்த வங்கிகளின் கடன் வழங்கும் இலக்கில் முத்ரா ஒரு திட்டமாக உள்ளது.

முத்ரா திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், ஹிமால்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்க மாநிலத்தில் முத்ரா திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் பிரதமருடன் காணொலி மூலம் உரையாடினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x