மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் உத்தரவாதம் தொடர்பான சிக்கல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை நடத்தியது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இன்று (சனிக்கிழமை) நடத்தியது. வாங்கிய தேதிக்கு பதிலாக அந்த உபகரணங்கள், நுகர்வோரின் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு பயன்பாட்டைத் தொடங்கும் தேதியிலிருந்து உத்தரவாத காலத்தை தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளின்படி உத்தரவாத காலம், கொள்முதல் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொருளை வாங்கும் நுகர்வோர் அதைத் தங்கள் வளாகத்தில் உரிய முறையில் நிறுவிய பின்னரே அதைப் பயன்படுத்தத் தொடங்க முடியும்.

சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி கரே தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில், ரிலையன்ஸ் ரீடைல், எல்ஜி, பானாசோனிக், ஹையர், க்ரோமா உள்ளிட்ட முக்கிய மின்னணு பயன்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரத்தில் மூன்று முக்கிய அம்சங்களை தலைமை ஆணையர் நிதி கரே குறிப்பிட்டார். முதலாவதாக, உத்தரவாத காலத்தின் தொடக்கம் குறித்து நுகர்வோருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, உலகளாவிய சிறந்த நடைமுறைகள் இந்தியாவில் பின்பற்றப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். மூன்றாவதாக, உத்தரவாத காலம் தொடர்பான நுகர்வோரின் குறைகள் உடனடி முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மின்னணு சாதனங்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். நிறுவுதல் தேவைப்படுவது அல்லது நிறுவுதல் தேவைப்படாமல் உடனடியாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதே அந்த வகைகளாகும். இவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in