

பெங்களூரு: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் அங்கு குளிர்பானம், திண்பண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்தார். இதற்காக கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பும், சலுகையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்த முத்தையா முரளிதரன் மீண்டும் எம்.பி.பாட்டீலை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகாவில் ரூ.1400 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்தார். இதற்கு கர்நாடக அரசு சாமராஜ நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தொழிற்சாலை 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் இயங்கும் என அறிவித்தார். இதுதவிர தார்வாட் மாவட்டத்திலும் முத்தையா முரளிதரன் 2-வது கட்டமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.