

அதிகரித்துள்ள கடன் சுமையைக் குறைப்பதற்காக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள ஹோட்டல்களை விற்பனை செய்ய ஹோட்டல் லீலாவெஞ்சர் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அபுதாபி, கத்தார் மற்றும் மலேசியாவில் உள்ள சாவ்ரின் வெல்த் ஃபண்ட் நிறுவனத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்விரு இடங்களில் உள்ள ஹோட்டல்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 1,850 கோடியைத் திரட்டி தனது கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
சென்னையில் எம்ஆர்சி நகரில் 326 அறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஹோட்டல் லீலாவதி குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளது. இதேபோல டெல்லியில் 260 அறைகளைக் கொண்ட ஹோட்டல் உள்ளது. டெல்லியில் ஹோட்டல் உள்ள இடத்தை வாங்குவதற்கு மட்டும் இக்குழுமம் ரூ. 600 கோடியை செலவிட்டுள்ளது. சாணக்கியபுரியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இரு ஹோட்டல்களை விற்பனை செய்வதாக லீலா குழுமம் பங்குச் சந்தைக்கு தெரிவித்தது. மேலும் நலிவடைந்த நிறுவனங்களை சீரமைக்கும் (சிடிஆர்) திட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது. இப்போது மீண்டும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.