Published : 26 May 2018 09:25 AM
Last Updated : 26 May 2018 09:25 AM

ஐஃபோன் வடிவமைப்பை நகலெடுத்த விவகாரம்; சாம்சங் நிறுவனத்துக்கு 53 கோடி டாலர் அபராதம்

ஐஃபோன் வடிவமைப்பை நகலெடுத்ததாக சாம்சங் நிறுவனம் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனம் 53.3 கோடி டாலரை ஆப்பிள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில காப்புரிமை விதிகளை மீறியதற்காக மேலும் 50 லட்சம் டாலரை சாம்சங் செலுத்தவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக 2012-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் 105 கோடி டாலரை சாம்சங் செலுத்தவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2016-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு வந்த இந்த வழக்கு பின்னர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் அபராதத் தொகையை 39.9 கோடி டாலராக குறைத்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து அபராதத் தொகையை மேலும் 14 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து 53.3 கோடி டாலரை சாம்சங் அபராதமாக செலுத்தவேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சாம்சங் நகலெடுத்த பகுதிகள், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பகுதியா அல்லது ஒரு சிறிய பகுதி மட்டும்தானா என்ற வகையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். சாம்சங் நகலெடுத்திருக்கிற பகுதி ஆப்பிள் ஐஃபோனின் மிக முக்கியமான பகுதி என ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது. சாம்சங் சார்பில் வாதாடிய ஜான் குவின், ஆப்பிள் குறிப்பிடும் வகை ஃபோன்களை விற்றதற்கான லாபத்தின் பங்கை ஆப்பிளுடன் பகிர்ந்துகொள்ள மாட் டோம் என்று சொல்லவில்லை, ஆனால் ஃபோனுக்கான முழு லாபத்தையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தர முடியாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகர நீதிபதி லூசி கோஹ் சாம்சங் நிறுவனத்துக்கு 53.3 கோடி டாலர் அபராதம் விதித்து உத்தர விட்டார்.

ஐஃபோனின் விளிம்புகள், திரை உட்பட மூன்று வெளிப்புற வடிவமைப்புகள் மற்றும் ஐகான் நிறங்களை சாம்சங் நகலெடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஃபோன்களை இனி சாம்சங் விற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சாம்சங் நிறுவனம் 39.9 கோடி டாலரை அபராதமாக ஆப்பிளுக்கு செலுத்திவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x