

கலிபோர்னியா: சந்தை மதிப்பில் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது என்விடியா. இதன் மூலம் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அது முந்தியுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று என்விடியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3.5 சதவீதம் ஏற்றம் கண்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 3.34 டிரில்லியன் டாலர்களை எட்டியது. இதன் மூலம் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை முந்தியது. ஆப்பிள் 3.29 டிரில்லியன் மற்றும் மைக்ரோசாஃப்ட் 3.31 டிரில்லியன் டாலர்களை சந்தை மதிப்பாக கொண்டுள்ளது.
ஜூன் தொடங்கியது முதலே என்விடியா நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. முன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தி இரண்டாம் இடத்துக்கு வந்தது. தொடர்ந்து ஜூன் இரண்டாவது வாரத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது ஆப்பிள். இந்நிலையில், முதிலடத்தை தற்போது என்விடியா பிடித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 170 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் ஏஐ சிப்களுக்கு உலக அளவில் உள்ள டிமாண்ட் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக வெறும் 96 நாட்களில் 2 டிரில்லியன் டாலர்களில் இருந்து 3 டிரில்லியன் டாலர்களை சந்தை மதிப்பில் அந்நிறுவனம் எட்டியது.
மறுபக்கம் சந்தை மதிப்பில் முன்பு முதலிடத்தில் இருந்த சிஸ்கோ மற்றும் எக்ஸான் மொபில் போன்ற நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியா: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நிறுவனமாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.