

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம் செயல்படுகிறது. உலகின் முன்னணி தர நிர்ணய நிறுவனங்களில் ஒன்றான இது, பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து காலாண்டுக்கு ஒருமுறை கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த வரிசையில் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் சர்வதேசபொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்' வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 7.2 சதவீதமாக இருக்கும்மாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் நுகர்வோர் செலவினம் மற்றும்பல்வேறு துறைகளில் முதலீடு அதிகரித்து வருவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்து உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே கருத்தை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.