

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள குலோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம், கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, குலோபல் டேட்பா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கப் பணபரிமாற்றத்துக்கு மாற்றாக ஈ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொபைல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இது பெரும்பாலும் யுபிஐ மூலம் இயக்கப்படுகிறது.க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் பணபரிமாற்றத்தை எளிதாக்குகிறது.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், மொபைல் மற்றும் டிஜிட்டல் வாலட்கள், ரொக்கம் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற பாரம்பரிய கட்டண முறைகளை இடமாற்றம் செய்துள்ளன. இத்தகைய டிஜிட்டல் தீர்வுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. ஆசிய பசிபிக் சந்தைகளில் இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் சீனா முன்னணியில் இருக்கிறது. 2023ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மொத்தமாக நடந்த ஈ-காமர்ஸ் கட்டண மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் ஈ-காமர்ஸ் பரிவர்த்தனை 65 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2018 ல் இது 53.4 சதவீதமாக இருந்தது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியாவும் பின்தங்கவில்லை. 2018ம் ஆண்டிலிருந்து மாற்று கட்டண முறைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிபை இந்தியா கொண்டிருக்கிறது. கடந்த 2018ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023ல் 58.1% ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா போன்ற ஆசிய பசுபிக் நாடுகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன், இணைய அணுகல், அதிகரித்து வரும் மின்னணு பண பரிமாற்றம், QR குறியீட்டு அடிப்படையிலான கட்டண தீர்வுகளின் பெருக்கம் ஆகியவற்றால் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கு அதிகரித்து வருகிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.