

கோவை: இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 20.78 சதவீதத்துடன், தொடர்ந்து அதிக பங்களிப்பு வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார், மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்தியாவின் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி 2023-2024 நிதியாண்டில் 34.43 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் தமிழ்நாடு 20.78சதவீதம் (7.15 பில்லியன் டாலர்), குஜராத் 15.36 சதவீதம் (5.29 பில்லியன் டாலர்), மகாராஷ்ட்ரா 11.54 சதவீதம் (3.97 பில்லியன் டாலர்), ஹரியாணா 10.52 சதவீதம் (3.62பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் 9.87 சதவீதம் (3.40 பில்லியன் டாலர்), கர்நாடகா 7.64 சதவீதம் (2.63 பில்லியன் டாலர்), ராஜஸ்தான் 4.64 சதவீதம் (1.60 பில்லியன் டாலர்), பஞ்சாப் 4.11 சதவீதம் (1.41 பில்லியன் டாலர்), மத்திய பிரதேசம் 3.81 சதவீதம் (1.31 பில்லியன் டாலர்), டெல்லி 2.99 சதவீதம் (1.03 பில்லியன் டாலர்), மேற்கு வங்கம் 2.54 சதவீதம் (0.87 பில்லியன் டாலர்), ஆந்திரா 1.34 சதவீதம் (0.46 பில்லியன் டாலர்) பங்களிப்பைக் கொண்டுள்ளன.
கரோனா பரவலுக்கு பின்னர் குறுகியகால வளர்ச்சியைப் பதிவு செய்த ஜவுளித் தொழில் துறை,மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டு மொத்த ஏற்றுமதி சிறிது அதிகரித்துள்ளது. இருப்பினும் 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரங்களில் 50 சதவீதம் வரை தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு தேவைப்படும் பஞ்சு, விஸ்கோஸ், பாலியஸ்டர், கழிவுப் பஞ்சு ஆகிய மூலப்பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதையும், சர்வதேச விலையில் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண் டும்.
குஜராத், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் போல தமிழகத்திலும் ஜவுளித் தொழில் துறைக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். மேலும், ஜவுளித் தொழில் அமைப்புகள் மட்டுமின்றி, ‘எம்எஸ்எம்இ’ உள்ளிட்ட அனைத்துப் பிரிவை சேர்ந்த தொழில் துறையினரும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தி, அனைவரின் ஆலோசனைகளை பெற்று, சிறப்பான முறையில் புதிய ஜவுளிக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.