

புதுடெல்லி: அடுத்த ஓராண்டில் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொடக்கூடும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களை வென்றது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்றார்.
இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து மூடிஸ் கூறுகையில், “பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொருளாதாரக் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பது ஊகிக்கக்கூடியது. இது பங்குச் சந்தை வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். தற்போதைய அரசு பேரியல் பொருளாதாரம் சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல், பங்குச் சந்தையிலும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.
தற்போது இந்திய பங்குச் சந்தை உச்சத்தை தொட்டு வருகிறது. அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரக்கூடும். இது 14 சதவீத வளர்ச்சி ஆகும். உற்பத்தித் துறை வளர்ச்சி, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிஆற்றலை நோக்கிய நகர்வு ஆகியவை இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்று தெரிவித்துள்ளது.