Published : 15 May 2018 08:23 AM
Last Updated : 15 May 2018 08:23 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு; சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,500 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியனின் பங்கு பற்றிய விவரங்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

உஷா அனந்தசுப்ரமணியன் தற்பொழுது அலகாபாத் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் மேலும் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

உஷா அனந்தசுப்ரமணியன் 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் இவரது தொடர்பு குறித்து சிபிஐ சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர்களான கே.வி.பிரம்மாஜி, சஞ்சீவ் ஷரன், சர்வதேச செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் நேஹல் அஹத் ஆகியோரது பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. இந்த மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவன ஊழியர்களில் ஒருவரான சுபாஷ் பராப் ஆகியோரது பங்கு குறித்த தகவல்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

டைமண்ட் ஆர் யுஎஸ், சோலார் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லர் டைமண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு போலியான உறுதியளிப்புக் கடிதங்கள் (எல்ஓயூ) வழங்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தகவல்களுக்கு இந்தக் குற்றப் பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்ஸியின் பங்கு குறித்த விவரங்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெறவில்லை. இந்த மோசடியில் கீதாஞ்சலி குழுமத்தின் பங்கு தொடர்பாக கூடுதல் குற்றப் பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்யும்பொழுது மெகுல் சோக்ஸி குறித்த தகவல்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

இந்த வழக்கில் தனித்தனியாக 3 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளிப்பதற்கு முன்னதாகவே நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x