

நொய்டா: பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மறுகட்டமைப்பு சார்ந்த திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட்ஸ் மற்றும் நிதி சார்ந்த சேவையை தொழில்நுட்பத்தின் துணையுடன் வழங்கி வருகிறது பேடிஎம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்ட நிறுவனம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாட்டுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது ரிசர்வ் வங்கி.
இந்தச் சூழலில் கடந்த மே மாதம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, நிறுவனத்தை மறுகட்டமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். தற்போது அதனை செயல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் ஊழியர்களை ஆட் குறைப்பு நடவடிக்கை மூலம் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதில் எத்தனை ஊழியர்களை பேடிஎம் பணி நீக்கம் செய்ய உள்ளது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்படும் ஊழியருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு அவுட்பிளேஸ்மென்ட் சார்ந்து வேண்டிய உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர் பிரிவு, வேலைக்கு ஆட்களை நியமிக்கும் நோக்கில் உள்ள சுமார் 30 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களிடம் தங்களது ஊழியர்கள் வழங்கும் விவரங்களை கொடுத்து பணி வாய்ப்பு பெற உதவுவோம் என்றும் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.