

கலிபோர்னியா: தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் என்விடியா நிறுவனம், அதன் சந்தை மதிப்பில் உலகின் 2-வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் ஆப்பிளை அந்நிறுவனம் முந்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நிறுவனமாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது மூன்று ட்ரில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை கடந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியுள்ளது. ஆப்பிளின் சந்தை மதிப்பு 3.003 ட்ரில்லியன் டாலர்கள். தற்போது என்விடியாவின் சந்தை மதிப்பு 3.15 ட்ரில்லியன் டாலர்கள். அண்மையில் அதன் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்தது. அதனால் தற்போது 1,224.40 டாலர்கள் என்ற மதிப்பில் அதன் பங்கின் விலை உள்ளது.
2024-ல் மட்டும் சுமார் 147 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் கண்டுள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள ஏஐ புரட்சி காரணமாக டெக் உலக சாம்ராட்களான ஆப்பிள், கூகுளின் ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக்கின் மெட்டா போன்ற நிறுவனங்களே என்விடியாவின் ஏஐ சிப்களை சார்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆப்பிள் போன்களின் விற்பனை உலக சந்தையில் மந்தமாகி உள்ளது, சீனா நாட்டில் நிலவில் போட்டி போன்ற காரணங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் உள்ளது. ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. விரைவில் என்விடியா முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.