Published : 05 Apr 2018 09:29 AM
Last Updated : 05 Apr 2018 09:29 AM

உலக வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை விவாதிப்பதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை: வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

உலக வர்த்தக மையத்தில் (டபிள்யூடிஓ) சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எழுப்புவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை என வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். வர்த்தகத்துடன் சுற்றுச்சூழல் தொடர்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள், இ-வர்த்தகம், சுற்றுச்சூழல் , சுற்றுச்சூழலில் இருந்து கிடைக்கும் பசுமையான பொருட்கள் மற்றும் அரசுகளின் கொள்முதல்கள் குறித்து உலக வர்த்தக மையத்தில் ஆலோசிக்க வேண்டுமென பணக்கார நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் சுரேஷ் பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

உலக வர்த்தக மையம் வர்த்தகம் சார்ந்த செயல்களுக்கானது. சுற்றுச்சூழலுக்கு தனியான விதிமுறைகள் உள்ளன. வர்த்தகம் செய்கிற அதே வேளையில் சுற்றுச்சூழல் பிர்ச்சினைகளையும் கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது. இது குறித்து நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். ஆனால் சுற்றுச்சூழல் குறித்த ஒப்பந்தங்களை உலக வர்த்தக மையத்தில் செய்துகொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அது எங்களுக்கு தேவையற்றது என்று சுரேஷ் பிரபு கூறினார்.

புதிய தொழில் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் பிரபு அந்தத் திட்டம் கருத்துக்கேட்புக்கு விடப்பட்டுள்ளதாகவும், கருத்துகளைப் பெற்றபின் கொள்கை ஒப்புதலுக்காக வர்த்தகத் துறை மத்திய அமைச்சரவையை அணுகும் என்றார். சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்களும் இந்தக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1991-ம் ஆண்டு தொழில் கொள்கையை இந்த புதிய தொழில் கொள்கை முற்றிலுமாக மாற்றியமைக்கும். அடுத்த இருபது ஆண்டுகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஆண்டுக்கு 10 கோடி டாலர் அந்நிய முதலீட்டைப் பெறுதல் போன்ற இலக்குகளை முன்நிறுத்தி வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) கடந்த ஆகஸ்டில் தொழில் கொள்கை வரைவைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x