

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து 100 டன் தங்கத்தை இந்தியா கொண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024 மார்ச் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கி வசம் 822 டன் தங்கம் உள்ளது. இதில் 414 டன் தங்கம் வெளிநாடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள்வசமுள்ள தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் சேமிப்பது பொதுவான நடைமுறையாக உள்ளது. இந்தியாவும் பெரும் அளவிலான தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலேயே சேமித்து வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமீப ஆண்டுகளாக அதிக அளவில் தங்கம் வாங்கி வருகிறது. இதனால், தங்க சேமிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், குறிப்பிட்ட அளவை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே 100 டன்தங்கம் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மீண்டும் இதே அளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறுகையில், “1991-க்குப் பிறகு இவ்வளவு அளவிலான தங்கம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை. பல்வேறுகட்ட நடைமுறைகளுக்குப் பிறகே தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்காக மிகுந்த பாதுகாப்புடன்கூடிய சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு நிலவரப்படி ரிசர்வ் வங்கி வசம் 618 டன் தங்கம் இருந்தது. தற்போது அது 822 டன்னாக உயர்ந்துள்ளது.