

மும்பை: ஜியோ நிதி சேவை நிறுவனம் வியாழக்கிழமை அன்று Jio Finance App என்ற செயலியை அறிமுகம் செய்தது. பீட்டா வெர்ஷனாக வெளிவந்துள்ள இந்த செயலி மூலம் யுபிஐ, டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பல நிதி சேவைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ல் ஜியோ டெலிகாம் நிறுவன சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அது முதலே ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ ஃபைபர் என பல்வேறு சேவைகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ நிதி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சூழலில் தற்போது ‘ஜியோ ஃபைனான்ஸ் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேங்கிங், யுபிஐ, பில் செட்டில்மென்ட்ஸ், இன்சூரன்ஸ் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த செயலி இயங்கும் என ஜியோ நிதி சேவை தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் பயனர்களுக்கு அவர்களது நிதி நிர்வாகம் சார்ந்து எளிதான பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதே தங்கள் திட்டம் என்றும் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வீட்டுக் கடன் முதல் பல்வேறு கடன் சார்ந்த சேவைகளையும் இதில் வழங்க உள்ளதாகவும் தகவல்.
இந்தியாவில் யுபிஐ: இந்தியாவில் நாளுக்கு நாள் யுபிஐ சேவையை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது இந்த யுபிஐ பேமென்ட் முறை. இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.
நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. ஏற்கெனவே இந்திய சந்தையில் கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் தற்போது ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகமாகி உள்ளது.