

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர் மழையால் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் மிளகாய் விலை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இந்தக் கோடை மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி பாவூர்சத்திரம், மானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதிகளிலும் காய்கறிகள் உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலிக்கு காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளது. திருநெல்வேலி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.50 வரையிலும், கத்தரிக்காய் ரூ.20-ல் முதல் ரூ.30 வரையிலும், கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 150 ரூபாய்க்கும் அவரைக்காய் 160 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே மிளகாய் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. மழை காரணமாக, உள்ளூர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துவிட்டது. எனவே விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் 150 ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் சந்தைக்கு மிளகாய் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த மிளகாய் தற்போது கிலோ ஒன்றுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. உற்பத்தி குறைந்தாலும் விலை உயர்ந்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.