

ஹைதராபாத்: கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதற்காக உணவகத்தின் உரிமையாளரான ராகவேந்திர ராவ், மன்னிப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசி இருந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. ‘அவர் மன்னிப்பு கேட்கிறாரா அல்லது மிரட்டுகிறாரா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ஏனெனில், அந்த வீடியோவில் அவரது பாடி லாங்குவேஜ் அப்படி இருந்தது.
மே 23-ம் தேதி அன்று தெலங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹைதராபாத் ராமேஸ்வரம் கஃபே கிளையில் காலாவதியான 100 கிலோ உளுத்தம் பருப்பு, முறையற்ற முத்திரை இல்லாத 450 கிலோ அரிசி, 300 கிலோ வெல்லம், 10 லிட்டர் தயிர் மற்றும் 8 லிட்டர் பால் இருப்பில் இருந்ததை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அண்மையில் பெங்களூருவின் இந்திரா நகரில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
“எப்போதுமே சிறந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்க உறுதி ஏற்றுள்ளோம். சிறிய தவறு செய்துவிட்டோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அய்யாவின் வழியை பின்பற்றி வருகிறோம் என்பதை எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் சிறு தவறு கூட செய்யக்கூடாது. இதனை நாங்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம். அனைத்து நிலைகளிலும் கவனம் வைக்குமாறு எனது குழுவுக்கு எடுத்து சொல்லியுள்ளேன். நாங்கள் பயன்படுத்தும் அனைத்து மூல பொருட்களும் ப்ரீமியம் தரத்திலானது” என உரிமையாளர் ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
‘செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அவரது பேச்சு இல்லை. ஏதோ மிரட்டும் தொனியில் உள்ளது’, ‘இனி நான் அங்கு செல்லப்போவது இல்லை. அவர் வாடிக்கையாளர்களை அச்சுறுத்துகிறார்’, ‘அவரது பேச்சுக்கும், ஆக்ரோஷத்துக்கும் அறவே தொடர்பு இல்லை’. ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு காலாவதியான பொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெளியாகி உள்ள இந்த வீடியோ பதிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என இந்த வீடியோ குறித்து சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.