Published : 28 May 2024 04:39 PM
Last Updated : 28 May 2024 04:39 PM

பசுக் கன்று மட்டுமே ஈனுவதற்கு வழிவகுக்கும் உள்நாட்டுத் தொழில்நுட்பம்!

இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தேசியப் பால்வள மேம்பாட்டு நிறுவனம் (National Dairy Development Board-எண்டிடிபி) 1965-இல் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் 1940-களின் பிற்பகுதி வரை, ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளில் 110-120 கிராம் பால் மட்டுமே கிடைக்கும் அளவுக்குப் பால் உற்பத்தி இருந்தது. இந்நிலையில், தேசியப் பால் வள மேம்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பால் உற்பத்தி அதிகரித்தது. உதாரணமாக, Operation Flood உள்பட வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திய திட்டங்கள். இந்நடவடிக்கைகளால், ஒருவருக்கு ஒரு நாளைக்கு 300 கிராமுக்கும் அதிகமான அளவில் பால் கிடைக்கும்வகையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இன்று உலகிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

மாடுகளின் பராமரிப்பு, இனப்பெருக்கம், கால்நடைத் தீவனம் போன்ற துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான ஆய்வுகளில் தேசியப் பால் வள மேம்பாட்டு நிறுவனம் ஈடுபடுகிறது. இதன் ‘பால் வளச் சேவைகள்’ பிரிவின்கீழ், மாடுகளின் உறைந்த நிலை விந்து நிலையம் நாட்டில் 4 இடங்களில் செயல்பட்டு வருகின்றது. சென்னை செங்குன்றம் அருகே அலமாதி என்னும் இடத்தில் உள்ள உறைநிலை விந்து நிலையம் அவற்றில் ஒன்று. இது 2015-இல் 358 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது. நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பல அடுக்குப் பாதுகாப்புடன், உயர்ந்த மரபணுத் தகுதி கொண்ட 25 வகைகளுக்கு உட்பட்ட 300 காளைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றிடமிருந்து பெறப்படும் விந்தணுக்கள் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் இந்த நிலையம் ஒரு கோடி டோஸ் விந்தணுக்களை ‘சுப்பீரியர் அனிமல் ஜெனிட்டிக்ஸ்’ என்கிற பெயரில் விற்பனை செய்து வருகிறது. தங்கள் மாடுகளுக்குச் செயற்கை கருவூட்டல் முறை மூலம் விவசாயிகளுக்கு இந்த விந்தணுக்கள் விற்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக, மாட்டுக்குப் பசுக் கன்று (கிடாரி) பிறப்பதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் இங்கு நடந்து வருகின்றன. இந்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் ஆதரவுடன் இந்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

சென்னைக்கு 27.5.24 அன்று வந்திருந்த தேசியப் பால்வள மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மீனேஷ் ஷா, இங்குள்ள வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மாட்டின் பாலினத்தை உறுதிப்படுத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பம் இன்னும் 2 மாதங்களில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் எனவும் வணிக நோக்கில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் மினேஷ் ஷா பதில் அளித்தார்.

”மாடுகள் இயற்கையான முறையில் இணைசேரும்போது நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. பிறக்கும் கன்று ஆணாகவோ (கிடா), பெண்ணாகவோ (கிடாரி) இருப்பதற்குச் சம வாய்ப்புகள் உள்ளன. பசுங்கன்று பிறந்தால், விவசாயிக்குப் பொருளாதார நோக்கில் பயன்களைத் தருகிறது. காளைக்கன்று பிறந்தால் அதனால் ஏற்படும் பொருளாதாரப் பயன்பாடுகள் குறைவு. அது இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு நடைமுறையில் பல தடைகள் உள்ளன. பெண் கன்று பிறப்பது உறுதிப்படுத்தப்பட்டால் கால்நடைப் பராமரிப்பு வலுவடையும். எனவே மாட்டுக்குப் பெண் கன்று பிறப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

பசுவின் உயிரணுவில் உள்ள x குரோமோசோமுடன், காளையின் உயிரணுவில் உள்ள x குரோமோசோம் அல்லது y குரோமோசோம் சேரலாம் என்பதே இயல்பான இனப்பெருக்க நிகழ்வு. குரோமோசோம் சேர்க்கை xy ஆக இருப்பின், ஆண் பிறக்கும்; சேர்க்கை xx ஆக இருப்பின் பெண் பிறக்கும். உறைநிலை விந்து நிலையத்தில், காளையிடமிருந்து பெறப்படும் உயிரணுவிலிருந்து y குரோமோசோம் தனியே பிரிக்கப்பட்டு விடுகிறது. X குரோமோசோம் மட்டுமே உள்ள உயிரணு, பசுவுக்குச் செலுத்தப்படுவதன் மூலம் xx இணை உறுதிப்படுத்தப்பட்டு, பசுக்கன்று பிறப்பது சாத்தியமாகிறது.

இதன் மூலம் மிகவும் ஆரோக்கியமான, வலிமை மிக்க மரபணுவைத் தருகிற காளையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுக்கள் பசுக்களுக்குச் செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் பசுக்கன்று பிறப்பதும், அது நோய்த்தொற்று இல்லாமல் இருப்பதும் உறுதிசெய்யப்படுகிறது. எனினும் இது வெளிநாட்டுக்குச் சொந்தமான தொழில்நுட்பம் என்பதால், ஒரு டோஸ் விந்தணு 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது எல்லா விவசாயிகளுக்கும் ஏற்ற கட்டணம் எனக் கூற இயலாது.

இந்தச் செலவைக் குறைப்பதற்கும் பாலின வகைப்பாட்டை நிர்ணயிப்பதில் தற்சார்பான தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கும் அலமாதி உறைநிலை விந்து நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்றன. எச்எஃப், ஜெர்ஸி ஆகிய வெளிநாட்டு வகைகள், முரா, காங்கேயம், சிவப்பு சிந்தி போன்ற உள்நாட்டு வகைகள் ஆகியவற்றின் கலப்பினங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இவை அதிகளவில் பால் தருவதாகவும் உள்நாட்டுத் தட்பவெப்பநிலைக்குப் பொருந்தும் விதத்திலும் இருக்கும். ஆராய்ச்சி முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தந்துள்ளன.

இயற்கையான இணைசேரலில் கன்று ஈனுவதற்கான சாத்தியக்கூறு 40-45 சதவீதம் இருக்கும். அதே அளவு சாத்தியம், இந்தத் தொழில்நுட்பத்திலும் இருக்கும். இதுவரை, அலமாதி நிலையத்திலிருந்து பாலின நோக்கில் வகைப்படுத்தப்பட்ட உறைந்த மாட்டு விந்து 5000 டோஸ் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட், 2024இல் இந்தத் தொழில்நுட்பம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். பாலின வகைப்பாட்டை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தற்போது ஆகும் செலவில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்கை இனி விவசாயிகள் செலவழித்தால் போதும். இது முற்றிலும் உள்நாட்டிலேயே கண்டறியப்பட்ட தொழில்நுட்பமாகும்’ என மீனேஷ் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x