Last Updated : 23 May, 2024 05:51 PM

 

Published : 23 May 2024 05:51 PM
Last Updated : 23 May 2024 05:51 PM

தமிழகத்தில் கூகுள் பிக்சல் தொழிற்சாலை: விரைவில் முதல்வர் ஸ்டாலின் உடன் நிறுவன அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக தனது பிக்சல் தொழிற்சாலையை அமைப்பதற்காக கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி அவற்றின் மூலம் ரூ.9 .61 லட்சம் கோடிக்கான முதலீடுகளை் ஈர்க்கப்பட்டுள்ளது. இவற்றின் பலனாக 30 லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமெரிக்கா சென்றார். அங்கு உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். இதன் மூலம் சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்தத் தகவல்கள் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x