டெல்லியில் ஏசி பேருந்து இயக்க ஊபர் நிறுவனத்துக்கு அனுமதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை ஊபர் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் ஊபர் ஷட்டில் மூலமாக இது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

அண்மையில் அதற்கான உரிமத்தை டெல்லி போக்குவரத்து துறையிடம் இருந்து ஊபர் நிறுவனம் பெற்றுள்ளது. இது டெல்லியின் ப்ரீமியம் பேருந்து திட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் சேர்ந்து இந்த ஏசி பேருந்துகளை ஊபர் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊபர் ஷட்டில் வாகனத்தில் 19 முதல் 50 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் ஊபர் செயலி மூலம் ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வழித்தடத்தையும் தேர்வு செய்து கொள்ளும் வகையிலான வசதியும் உள்ளது.

செயலி மூலமாக பயனர்கள் பேருந்தின் லைவ் லொகேஷன் குறித்த தகவலை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ளலாம். அதில் பேருந்து வரும் நேரத்தையும் அறியலாம். முன்னதாக, ஊபரின் பேருந்து சேவை சோதனை அடிப்படையில் டெல்லியில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த சூழலில் அந்த சேவையை டெல்லியில் பரவலாக செயல்படுத்த ஊபர் முடிவு செய்துள்ளது. கொல்கத்தா நகரில் இந்த சேவை பயன்பாட்டில் கடந்த ஓராண்டு காலமாக பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் பயனர்களுக்கு ஒரு புதிய ஆப்ஷனாகவும், ஓட்டுநர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை இது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும். மேலும், ஒரே நேரத்தில் பயனர்கள் பயணத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும்” என ஊபர் ஷட்டில் தலைமை பொறுப்பில் உள்ள அமித் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in