Published : 28 Apr 2018 08:33 AM
Last Updated : 28 Apr 2018 08:33 AM

தொழில் ரகசியம்: அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு...

று அறிவு ஜென்மம் என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு சமயத்தில் அறிவு குறைகிறது. எளிதில் ஏமாறுகிறோம். இதை நான் சொல்ல, உன்னைப் பற்றி கூறிக்கொள், என்னை ஏன் சேர்க்கிறாய், நான் அப்படியல்ல என்பீர்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள், நாம் அனைவரும் சமயங்களில் லூசுத்தனமாக நடந்துகொள்கிறோம். என்ன, லூசு என்று தெரிவதில்லை. கேனத்தனமாய் ஏமாறவும் செய்கிறோம். அதையும் உணர்வதில்லை. அப்படியொரு விஷயம் பற்றி இன்று பேசுவோம். படித்துவிட்டு நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்!

லிஃப்டிற்குள் நுழைகிறீர்கள். செல்ல வேண்டிய ஃப்ளோரை அழுத்தி லிஃப்ட் கதவு மூடலாம் என்பது போல் மூடும் பட்டனை அழுத்துகிறீர்கள். லிஃப்ட் கதவு மூட `அடிமை வாழ்வே, என் அதிகாரத்திற்கு கட்டுப்படும் அற்ப பதறே’ என்பது போல் அதைப் பார்த்து புஷ்பக விமானம் ஏறி தேவலோகம் போவது போல் தலை நிமிர்ந்து லிஃப்ட் மேலே போவதை இறுமாப்புடன் பார்த்தவாரே செல்கிறீர்கள். உண்டா, இல்லையா?

உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா? 1990க்கு பிறகு தயாரிக்கப்பட்ட லிஃப்டுகளில் ‘கதவை மூடும்’ பட்டன் இருந்தாலும் வேலை செய்யாதாம்! வரும், ஆனா வராது என்பது போல் பட்டன் உண்டு ஆனால் மூடாது. லிஃப்ட் எத்தனை நேரம் காத்திருந்து மூடவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை நேரம் காத்திருந்து தான் மூடுமே ஒழியே நீங்கள் மூடு என்று அழுத்துவதால் மூடாது. இது தெரியாமல் நம் ஆணைக்கு கட்டுப்படுகிறது என்ற மமதையில் இத்தனை நாள் ‘மூடிடு சீசேம்’ என்று கூறாத குறையாக அழுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஏன் இந்த கண்றாவி? இதை விளக்குவதற்கு முன் மூடும் பட்டன் ஏன் லிஃப்ட்டில் வைக்கப்பட்டது என்பதை பார்க்கவேண்டும். 1990 வரை தயாரிக்கப்பட்ட லிஃப்ட்டுகளில் மூடும் பட்டன் இருந்து அதுவும் சமர்த்தாய் வேலை செய்தது. அந்த வருடம் உடல் ஊனமுற்றவர்கள் லிஃப்ட்டில் நுழைய தேவையான நேரம் தரவேண்டும், படாரென்று அவர்கள் முகத்தில் அறைவது போல் கதவை மூடும் உரிமை லிஃப்டில் இருப்பவருக்கு தரப்படக்கூடாது என்று கூறும் ‘Americans with disabilities act’ என்ற சட்டம் அமலுக்கு வந்தது. அன்று முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் லிஃப்ட்டுகளில் மூடும் பட்டன் இருந்தாலும் அது செயலிழக்கப்பட்டிருக்கிறது.

செய்யாத வேலைக்கு எதற்கு லிஃப்ட்டில் பட்டன்? ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ? அதை பிடுங்கி எறியவேண்டியது தானே என்று தோன்றலாம். அதற்குக் காரணம் உண்டு. நம்மையறியாமல் நம்மை வழிநடத்தும் உளவியல் உண்மை ஒன்றை உங்களுக்கு உரைக்க வேண்டியிருக்கிறது.

நாம் இன்று அவசர கதி வாழ்க்கை வாழ்கிறோம். காலை எழுந்ததிலிருந்து இரவு படுப்பது வரை அசாத்திய வேகத்தில் சுழல்கிறது உலகம். ஒரு விஷயத்தை ஒரு விதமாக அணுகி அதை ஒருவழியாய் முடிப்பதற்குள் இருவேறு பிரச்சினைகள் முளைத்து அதை சரி செய்வதற்குள் மூன்று புதிய பணிகள் முளைத்து அனைத்திலும் மனம் சிக்கி செய்யும் பணிகளின் மீது கட்டுப்பாட்டை இழக்கிறோம். வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்ற எண்ணம் நம்முன் வளர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் போர்க் களமாக தெரிய பைத்தியம் பிடித்து பாயை பிராண்டுகிறோம்.

லிஃப்ட் தயாரிப்பாளர்கள் அநியாயத்திற்கு நல்லவர்கள். வாழ்க்கையின் மீதே கட்டுப்பாட்டை இழக்கும் நம் மனதை அமைதிப்படுத்த லிஃப்ட்டில் மூடும் பட்டனை வைத்திருக்கிறார்கள். அவசர வாழ்க்கையில், அவதிப்படும் பிரச்சினைகளுக்கு இடையே வாழ்க்கையின் எந்த அம்சம் மீதும் கட்டுப்பாடு இல்லாமல் லிஃப்ட்டில் நுழையும் நாம் பலம் கொண்ட மட்டும் மூடும் பட்டனை அழுத்த அது மூடும் போது ‘ஹாஹா உலகம் நம் ஆணைக்கு கட்டுப்படுகிறது’ என்ற ஒரு அல்ப சந்தோஷத்தை அனுபவிக்க நமக்கு வசதி செய்து தந்திருக்கிறார்கள். மூடும் பட்டன் என்று வேலை செய்யாத ஒன்றை வைத்திருப்பதன் மூலம்.

இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள். லிஃப்ட்டில் ஏறியபின் இன்னொருவர் லிஃப்டை பிடிக்க ஓடி வருவது தெரிந்து அவர் வரும் வரை பொறுத்திருக்க மனம் இல்லாமல் ‘ஆயிரம் இன்னல்களுக்கிடையே எதையுமே கட்டுப்படுத்த முடியாமல் கிடந்து அல்லாடுகிறேன், உனக்கெதற்கடா லிஃப்ட், மவனே இங்கேயே காத்து கிட’ என்பது போல் அவர் வருவதற்கு முன் கதவை சாத்தவே பலருக்கு தோன்றுகிறது.

நம் எண்ணங்களுக்கு வடிகால் தான் மூடும் பட்டன். `நான் சொல்கிறேன், மரியாதையாய் மூடு’ என்பது போல் மூடும் பட்டனை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை அழுத்தும் போது லிஃப்ட் தானாய் மூட லிஃப்ட் ஏதோ நம்மால் தான் மூடியது போல் நினைக்க வைத்து இந்த மட்டும் லிஃப்ட்டையாவது கட்டுப்படுத்த முடிகிறதே என்று திருப்தியடைகிறோம்.

நல்ல வேளை, லிஃப்டுக்கு வாய் இல்லை. இருந்தால் பட்டனை அழுத்தி நம்மால் தான் மூடியது என்ற ஆணவத்தில் நிற்பவரைப் பார்த்து ‘மூடும் பட்டனை அழுத்துவதற்கு பதில் கொஞ்சம் மூடிக்கொண்டு நில்லேன், நானே மூடிக்கொள்கிறேன்’ என்று கூறும்!

‘கட்டுப்படுத்தும் திறனும் சக்தி நம்மிடம் இருக்கிறது என்ற பிரக்ஞை நமக்கு முக்கியம்’ என்கிறார் ‘ஹார்பர்ட் பல்கலைக்கழக’ உளவியலாளர் ‘எலன் லாங்கர்’. அந்த எண்ணம் நம் மன அழுத்தத்தைக் குறைத்து ஆறுதல் அளிக்கிறது என்கிறார். ஒன்றும் செய்யமுடியாத நிலையை விட எதையோ செய்ய முடிகிறதே என்ற திருப்தி வாழும் வாழ்க்கைக்கு கொஞ்சம் அர்த்தம் தருவதாய் நினைக்கிறோம். `கட்டுப்படுத்தும் சக்தி உள்ளவர்கள் என்ற மாயையை லிஃப்டின் மூடும் பட்டன் மனதில் தோற்றுவிக்கிறது’ என்கிறார் ‘ட்ரெக்ஸல் பல்கலைக்கழக’ உளவியல் பேராசிரியர் ‘ஜான் கூனியோஸ்’. இது போன்ற வடிகால்கள் இல்லாத போது நம்மை சுற்றிய விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் மனதில் வளர்ந்து அது நம்மை டிப்ரெஷனுக்குக் கூட கொண்டு செல்கிறதாம். ஆக நாம் அழுத்துவது மூடும் பட்டனை அல்ல; நம் மன அழுத்தத்தை!

இது ஏதோ லிஃப்ட் சமாச்சாரம்தான், மற்ற இடங்களில் நான் ஏமாறுவதில்லை என்று நினைக்காதீர்கள். சில கம்பெனிகளில் ஏசி ஓடும் சத்தத்தை மட்டும் உண்டாக்கி ஆபீசே கூலாக இருப்பது போல் நினைக்க வைக்கிறார்கள்.

அமெரிக்காவில் குளிர் காலத்தில் பில்டிங்கில் ஹீட்டரை அட்ஜஸ்ட் செய்யும் தெர்மோஸ்டேட்டுகள் வேலை செய்யாதாம். சும்மா தேமே என்று இருக்கும் இதை குறைக்கிறேன் என்று திருகுபவர்கள் குளிர் குறைந்தது போல் நினைத்து திருப்திபட்டுக்கொள்கிறார்கள்!

இவ்வகை மேட்டரை ‘ப்ளாசிபோ பட்டன்கள்’ (Placebo button) என்கிறார்கள். ஒன்றும் செய்யாத, ஆனால் நம் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கிறது என்ற தோற்றத்தை அளிக்க. சாதாரண விஷயத்திற்கு கூட பயந்து டாக்டரிடம் செல்பவர்களுக்கு சும்மாவேணும் ஏதாவது மாத்திரை தரப்படும் போது உடம்பு கொஞ்சம் தேவலையாகிவிட்டது போல் தோன்றுவதை ப்ளாசிபோ எஃபெக்ட் என்பார்கள். நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது கிடைத்தது போல் தோன்ற வைப்பது ப்ளாசிபோ எஃபெக்ட்.

இதெல்லாம் உடான்ஸ் போல் தெரிகிறதா? உங்களுக்கு இன்னொரு மேட்டர் சொல்கிறேன். ஒரு ஆய்வில் சில தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் செயல் திறனை அதிகப்படுத்தி இன்னமும் வேகமாக ஓட உதவும் இன்ஜெக்‌ஷன் தரப்படுகிறது என்று கூறினார்கள் ஆய்வாளர்கள். மற்றவர்களிடம் உப்பு சக்தி அதிகம் கொண்ட திரவம் தரப்பட்டது. ஸ்பெஷல் இன்ஜெக்‌ஷன் செலுப்படுத்தப்பட்ட வீரர்கள் மற்றவர்களை விட வேகமாக ஓடினார்கள்.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? இரண்டு பிரிவுகளுக்கும் தரப்பட்டது சாதாரண உப்பு தண்ணீரே. டம்ளரில் குடித்துவிட்டு ‘நமக்கு இவ்வளவு தான் கொடுப்பினை’ என்று இரண்டாவது க்ரூப் தேமே என்று ஓட, சூப்பர் இன்ஜெக்‌ஷன் தரப்பட்டிருக்கிறது; நம்மால் இன்னமும் வேகமாக ஓட முடியும் என்று முதல் பிரிவினர் நம்பிக்கொண்டு ஓடினார்கள். சர்வம் ப்ளாசிபோ உபயம்!

‘அய்யோ இப்படி தான் ஏமாறுகிறேனா, என்னது காந்தி செத்துட்டாரா’ என்பது போல் கவலைப்படாதீர்கள். வாழ்க்கையில் இது போல் சின்ன சின்ன விஷயங்களில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஒரு பெரிய விஷயமே அல்ல. அடுத்த முறை லிஃப்ட்டில் ஏறிய பின் பலம் கொண்ட மட்டும் அதிலிருக்கும் ப்ளாசிபோ பட்டன்களை ஒரு முறைக்கு நான்கு முறை அழுத்துங்கள். எப்படியும் கதவு ஒரு வழியாய் மூடிக்கொள்ள தான் போகிறது. நீங்கள் மூடவில்லை. தானாய் தான் மூடியது. அதனால் என்ன, நாம் மூடியது போல் நினைத்துக்கொள்வோம். நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தர இது போதாதா!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x