

ஈரோடு மஞ்சள் மண்டிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாநில விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் அமைப்பின் ஆணையர் சுன்சோங்கம் ஜடாக் சிரு, ஈரோடு ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை கமிட்டியின் (ஆர்எம்சி) செயலர் குழந்தைவேலுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக ஈரோடு மஞ்சள் மண்டிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தி இந்து வில் 5-ம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கு விளக்கம் அளித்து ஈரோடு ஆர்எம்சி செயலர் அனுப்பிய மின்னஞ்சலில் உள்ள தகவல்கள், தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் நம் கவனத்துக்கும் வந்தது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை ஈரோடு ஆர்எம்சி செயலர் மறுக்கவில்லை. வர்த்தகர்கள் மற்ற வர்த்தகர்களுடன் சேர்ந்துகொண்டு ஏலத்தில் எடுத்த பொருட்களை கடைசி நேரத்தில் நிராகரிப்பது குறித்தும் அந்த மின்னஞ்சலில் தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் எடையிடுவதற்கான தொகையை விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி செலுத்தவைப்பது, சந்தைக் கமிட்டியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாய ஆணையர் சடாக் சிருவிடம் கேட்ட பொழுது மண்டியில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
ஆர்எம்சியின் செயல்களை நியாயப்படுத்தும் வகையிலான தகவல்கள் பெரிய அளவில் கடிதத்தில் காணப்படவில்லை. எடையிடுவதற்கான கட்டணங்கள் குறித்து எடையிடுபவரும், வர்த்தகர்களும் தனிப்பட்ட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அதில் கமிட்டி தலையிடுவதில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எம்சியின் பணி குறித்து கடிதத்தில் காணப்படுவதாவது “எடையிடுபவரும், வர்த்தகர்களும் இணைந்து பல்வேறு வகையான கட்டணங்கள் குறித்து பரஸ்பர புரிதல் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கமிட்டியின் பொறுப்பு என்பது கட்டணங்கள் சரியாக பெறப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை இடுவது மட்டுமே. அதிகபட்சம் எவ்வளவு கட்டணத்தை ஒவ்வொரு பொருளுக்கும் வசூலிக்க முடியும் என்பதை இயக்குநரின் ஒப்புதலைப் பெற்று அனைவருக்கும் அறிவிக்கும் பணியைத்தான் கமிட்டி செய்யும்”
மஞ்சள் வர்த்தகர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் செம்மம் பாளையம் சந்தையில் ஒரு மூட்டையை எடையிடுவதற்கு விவசாயிகள் 3 ரூபாயும் , பொருட்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு (loading) 15 ரூபாயும் கட்டணம் செலுத்தவேண்டும். பெருந்துறை சந்தையில் இந்தக் கட்டணம் முறையே ரூ.5.35 மற்றும் ரூ.13.65 ஆக இருக்கிறது. மொத்தம் 19 ரூபாய். கருங்கல் பாளையத்திலுள்ள ஈரோடு விவசாயப் பொருட்கள் கூட்டுறவு சந்தையில் எடையிடுவதற்கு கட்டணம் இல்லை, பொருட்களை ஏற்றுவதற்கு ஒரு மூட்டைக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்ற தகவல்கள் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
66.5 கிலோ கிராம் எடையுள்ள மூட்டையை எடையிடும்போது சாக்கு எடை 1 கிலோ, தேவையற்ற கலப்புப் பொருட்கள் 0.5 கிலோ எனக் கணக்கில் கொள்ளப்பட்டு வர்த்தகர்கள் 65 கிலோவுக்கு மட்டும் பணம் தருவது கடிதத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தேவையற்ற பொருட்கள் கலப்பு இல்லையென வர்த்தகர்கள் எண்ணும் பட்சத்தில் மூட்டையின் உள்ள மஞ்சளின் அளவை 67 அல்லது 68 கிலோவுக்கு அதிகரிக்குமாறு வர்த்தகர்கள் ஆணையிடுவதாகவும் அதனை எடையிடுபவர்கள் பின்பற்றுவதாகவும் தெரிகிறது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது விவசாயியின் ஒப்புதலோடு நடப்பதாக கடிதம் குறிப்பிடுகிறது. `தி இந்து’ இதுகுறித்து சந்தையில் உள்ளவர்களிடம் உரையாடியபோது சிறு விவசாயிகளின் குரல்கள் ஒடுக்கப்படுவது தெரியவந்தது. தரம் பிரித்து சோதனை செய்வதே இதற்கான தீர்வு. ஆனால் ஈரோடு மண்டிகளில் தரச்சோதனை இதுவரை அமலில் இல்லை.
தமிழ்நாடு மாநில விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் அமைப்பின் ஆணையர் சுன்சோங்கம் ஜடாக் சிரு, ஏலப் பொருட்களை கடைசி நேரத்தில் வர்த்தகர்கள் நிராகரிக்க முடியுமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்படுள்ளதாகத் தெரிவித்தார். விதிமுறைகளின்படி சரியான விலை கிடைக்காவிட்டால் விவசாயிகள்தான் ஏலத்தை நிராகரிக்க முடியும். “இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வேன். விவசாயிகள் யாருக்கும் , எதற்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. எடையிடுவதற்கு வர்த்தகர்கள்தான் பணம் கொடுக்கவேண்டும். முறைகேட்டைத் தடுக்க விரைவில் எல்லா மண்டிகளிலும் மின்னணு எடையிடும் கருவிகள் கொண்டுவரப்படும்” என சுன்சோங்கம் ஜடாக் சிரு கூறினார்.
தர மதிப்பீட்டு சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், நபார்டு மூலம் மத்திய அரசு நிதி வழங்கிவருவதாகவும், எனவே 30 முக்கிய சந்தைகள் மற்றும் 8 கூட்டுறவு சந்தைகளில் தர மதிப்பீடு மற்றும் சோதனைக்கு 3-ல் இருந்து 5 கோடி அளவில் நிதி விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.