Published : 19 Apr 2018 10:07 AM
Last Updated : 19 Apr 2018 10:07 AM

வளர்ச்சிக்காக லாபத்தை தியாகம் செய்ய வேண்டும்: இன்ஃபோசிஸ் சிஇஓ சலீல் பரேக் கருத்து

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக லாபத்தை தியாகம் செய்ய வேண்டிய நேரம் இது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறிய தாவது:

வளர்ச்சிக்காக லாப விகிதங்களைக் குறைத்துக்கொண்டு அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். தவிர அடுத்து வரும் வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு ஏற்ற மனித வளங்களிலும் முதலீடு செய்வது அவசியம். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பணியாளர்களை தக்க வைத்தல், விற்பனை பணியாளர்களை அதிகரித்தல் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது அவசியம். எதிர்காலத்தில் இன்ஃபோசிஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் இப்போதைய முதலீடுகள் அவசியம். இந்த முதலீடுகள் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தேவைப்படமாட்டோம் என்று கூறினார்

திங்கள் கிழமை நடந்த வல்லுநர்கள் கூட்டத்தில், நிறுவனத்தின் லாப வரம்பு 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை மட்டுமே இருக்க கூடும் என்று பரேக் தெரிவித்தார். கடந்த ஆண்டை விட இந்த லாப வரம்பு குறைவாகும். இதன் காரணமாக இன்ஃபோசிஸ் பங்குகளில் ஏற்ற இறக்கமான வர்த்தகம் நிலவியது.

இது குறித்து மேலும் கூறும்போது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களுடைய திறன் தெரியும். எந்த நிறுவனத்திடமும் இல்லாத திறமையான பணியாளர்களும் அனுபவமும் எங்களிடம் இருக்கிறது. இவை வரும் காலத்தில் நிறுவனத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு வருமானம் 280 கோடி டாலராக இருக்கிறது. ஆனால் ரூ.20,000 கோடி டாலர் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.

பரேக் முந்தைய நிறுவனத்தில் பொறுப்பில் இருந்த போது பல கையகப்படுத்தல்களை நடத்தினார். அதேபோல இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் டிஜிட்டல் பிரிவில் கையகப்படுத்தலை தொடங்கி இருக்கிறார். இதற் கென இருக்கும் குழுவிடம் கையகப்படுத்தும் வாய்ப்பு உள்ள நிறுவனங்கள் குறித்த பட்டியலை பரேக் வழங்கி இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் முக்கியமான 48 வாடிக்கையாளர்களை சலில் பரேக் சந்தித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்கள் மற்றும் நிறுவனர்களையும் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக கூறும்போது நிறுவனர்களில் அசோக் அரோரா தவிர மற்ற நிறுவனர்கள் அனைவரையும் சந்தித்தேன். அனைவரும் சிறப்பாக முறையில் வரவேற்றனர். நாராயண மூர்த்தியை ஓரிரு முறை சந்தித்தேன் என பரேக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x