

சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (மே 18) காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1936-ல் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் பிறந்தவர். அதன் பின்னர் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. லயோலா கல்லூரியில் பட்டம் முடித்தார். அதன் பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆர்வம் செலுத்தினார். முதல் முயற்சியில் அது எட்டாத நிலையில் 1955-ல் எஸ்பிஐ வங்கியில் இணைந்தார்.
பின்னர் கடந்த 1981-ல் இந்திய வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். அதன் மூலம் பொதுத்துறை வங்கியின் இளம் வயது தலைவராக அறியப்பட்டார். அதன் பின்னர் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்பை கவனித்தார். அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவின் இரண்டாவது சிறந்த தனியார் துறை வங்கியாக மாற்றம் கண்டது.
வங்கித் துறையில் பலருக்கும் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். ஐசிஐசிஐ வங்கியில் பணி சார்ந்த தேர்வுகளில் பாலின ரீதியான நடுநிலையை கொண்டு வந்தவர். பின்னர் அந்த நடைமுறை அனைத்து துறையிலும் பரவலானது. வங்கி துறை சார்ந்த அவரது செயல்பாட்டுக்காக பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய ‘Reflections’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். அவரது மறைவுக்கு ஐசிஐசிஐ வங்கி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அந்த வங்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.