

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அளவு கடந்த நிதி ஆண்டில் 7.6 சதவீதம் உயர்ந்து 44,060 கோடி டாலரைத் தொட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பு அதிகரித்ததே இதற்குக் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அளவு 39,000 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ததால் இது அதிகரித்துள்ளது. 2013-ம் ஆண்டில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் எப்சிஎன்ஆர் சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டது. நிலுவைத் தொகையை திரும்ப அளிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சலுகை காட்டப்பட்டது.
மார்ச் 2010 நிலவரப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்புத் தொகை 4,790 கோடி டாலராக இருந்தது. இது மார்ச் 2013-ல் 7,090 கோடி டாலராக உயர்ந்தது. இது 2014 மார்ச் மாதம் 10,380 கோடி டாலராக உயர்ந்தது.
2013-ம் ஆண்டு அரசு அளித்த சலுகை காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டு அளவு கணிசமாக அதிகரித்தது. 2014 மார்ச் நிலவரப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பு 40.3 சதவீதம் அதிகரித்தது.
நீண்ட கால நீட்டிக்கப்பட்ட கடன் அளவு 35,140 கோடி டாலர் அளவாகும். இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 12.4 சதவீதம் கூடுதலாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடன் 8,150 கோடி டாலராகும். முந்தைய நிதி ஆண்டில் இது 8,170 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டுக் கடனில் அரசின் பங்களிப்பு சற்றுக்குறைந்து 18.5 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 19.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.