

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பழைய உணவு வகைகளை விற்பனை செய்ததாக பிரபல பிரியாணி கடையின் உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சியில் எட்டயபுரம் சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி கடையில் இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் சமைத்து, விற்பனையாகாமல் மீதமான உணவு பொருட்களை பிரட்ஜில் சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த பிரியானி கடையில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப் படாமல் முன் தயாரிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரிசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்கு தொற்று நோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்தி வருவதும் உறுதியானது. எனவே, அந்த பிரியாணி கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த பிரியாணி கடையை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: "அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், தங்களது வணிகத்துக்குச் சரியான வகையில் உரிமம் / பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச் சீட்டில், தயாரிப்பு (அல்லது) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் குறிப்பிட்டிருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணமும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். முதல் நாள் தயாரித்த உணவுப் பொருட்களில் மீதமானவற்றை பிரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது. மாறாக அதனை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் விபரங்கள் பராமரிக்க வேண்டும்.
முன் தயாரிப்பு செய்த அசைவ உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரத்தில், முன்தயாரிப்பு செய்த நாள் மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும். உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்று நோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத் தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்" என்றார்.