கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய ஸ்விஃப்ட் கார்: 8 நாட்களில் 10,000 பேர் முன்பதிவு

Published on

சென்னை: கடந்த 9-ம் தேதி இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (புதிய மாடல்) கார் அறிமுகமானது. இந்த புதிய மாடல் கார், கடந்த 8 நாட்களில் சுமார் 10,000 முன்பதிவினை கடந்துள்ளது. இந்த ஃபோர்த் ஜெனரேஷன் காரின் பேஸ் வேரியன்ட் முந்தைய ஜெனரேஷனை காட்டிலும் ரூ.25,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம்தான் மாருதி சுசுகி. இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல், வாகன பிரியர்கள் மத்தியில் பிரத்யேக வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் இதன் முதல் ஜெனரேஷன் (குளோபல்) கடந்த 2004-ல் அறிமுகமானது. கடந்த ஆண்டு ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்டின் ப்ரிவியூ வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இந்தியாவில் தற்போது அறிமுகமாகி உள்ளது.

இந்த காரின் அடிப்படை வேரியன்ட் விலை ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது. இதன் டாப் வேரியன்டின் விலை ரூ.9.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரை முன்பதிவு செய்ய ரூ.11,000 தொகையை கட்டணமாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி உள்ளது.

புதிய ஜெனரேஷன் ஸ்விஃப்ட் காரில் புதிய வடிவிலான ஹெட்லைட், பானெட், கிரில், முன்பக்க பம்பர், பின்பக்க விளக்கு, புதிய அலாய் வீல் இடம்பெற்றுள்ளது. ஐந்து வண்ணங்கள் மற்றும் ட்யூயல் டோனில் இந்த கார் கிடைக்கிறது. இன்டீரியரில் நவீனம் பின்பற்றப்பட்டுள்ளது.

ஆறு ஏர் பேக்ஸ் (ஸ்டாண்டர்ட்), அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் என பாதுகாப்பு அம்சங்களிலும் கவர்கிறது. இந்த அம்சங்கள் ஐந்து ட்ரிம் லெவலிலும் இடம்பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in