

கோவை: அட்சய திருதியை நாளில் தங்க நகை அல்லது நாணயங்கள் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்தவகையில், அட்சய திருதியை நாளையொட்டி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மக்கள் நகைகளை வாங்க நேற்று காலை முதலே ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்த தால் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகை வாங்க கடைகளுக்கு வந்தனர். புதிய வடிவமைப்புகளில் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: அட்சய திருதியை முன்னிட்டு கடந்த ஆண்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நடப்பாண்டில் பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தாலும், கிராம் கணக்கில் தான் நகைகளை வாங்கிச் சென்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதால் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு பணத்தை சேமித்து வைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 18.5 சதவீத அளவுக்கு நகை விலை உயர்ந்துள்ளதால் வாங்கும் திறன் குறைந்துள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் சுமார் 100 கிலோ வரை தங்க நகைகள் விற்பனையாகி இருக்கக் கூடும்’’ என்றார்.