Published : 22 Apr 2018 09:22 AM
Last Updated : 22 Apr 2018 09:22 AM

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய நிதி மோசடி குற்றவாளிகளைத் தண்டிக்க அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில், பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டம் 2018-க்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித் துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப் பெரிய அளவு மோசடி நிகழ்த்திய நீரவ் மோடி அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இத்தைகையோரால் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளது.

இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் கடந்த மார்ச் 12-ம் தேதி அவசர சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால் நாடாளுமன்றம் செயல்படாததால் இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் இது அமலுக்கு வரும்.

நிதி மோசடி மற்றும் வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளில் தங்கி, இந்தியா திரும்ப மறுக்கும் நபர்களது சொத்துகளை பறிமுதல் செய்து அவற்றை அரசு விற்பனை செய்ய இந்த சட்டம் வகை செய்கிறது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள், முத்திரைத் தாள், கரன்சிகளை போலியாக அச்சடித்தவர்கள், போதிய நிதி இல்லாமல் காசோலை திரும்புதல், கடன் அளித்த வங்கிகளை ஏமாற்று வோர் ஆகியோரை தண்டிக்கும் வகையில் சட்ட வழிவகைகள் இந்த அவசர சட்டத்தில் உள்ளன.

இந்த சட்டத்தின்படி துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ளவர் சிறப்பு நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி சட்டம் 2002-ன் கீழ் மனு தாக்கல் செய்யலாம். இந்தியா திரும்ப மறுப்பவர் என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டாலே போதுமானது.

எந்த நாட்டில் அவர் தங்கியுள்ளார், அவருக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளின் விவரம், அவருக்கு எதிராக எத்தகைய குற்றப் பிரிவு சட்டம் செயல்படுத்தலாம், பினாமி சொத்து விவரம், வெளிநாட்டில் அவருக்குள்ள சொத்து விவரம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவுகளை அளிக்கும். அதில் சம்பந்தப்பட்ட நபர் 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லையெ னில் அவசர சட்ட நடவடிக்கை கள் தொடரும். மோசடி குற்றவாளிகளுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அது குறித்து சிறப்பு நீதிமன்றத்துக்கு 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்குகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x