Published : 07 Apr 2018 08:30 AM
Last Updated : 07 Apr 2018 08:30 AM

பிட்காயினுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி: சொந்தமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடத் திட்டம்

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வோம் எனத் தெரிவித்துள்ளது.

வங்கிகள் உட்பட ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் செயல்படும் எந்த அமைப்புகளும் கிரிப்டோ கரன்சி சார்ந்த சேவைகளை வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கிரிப்டோ கரன்ஸி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நிதி அமைப்பின் திறன் மற்றும் நிதி அமைப்பில் அனைவரையும் உள்ளடக்குதல் போன்றவை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் நுகர்வோர் பாதுகாப்பு, சந்தை ஒருமைப்பாடு மற்றும் பண மோசடி குறித்து எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிரிப்டோ கரன்சிகளிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பயனர்கள் மற்றும் வர்த்தகர்களை தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கிக்கென ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கும் குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும், ஜூன் மாதம் இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்பிஐ துணை கவர்னர் பி.பி.கனுன்கோ, ஆர்பிஐக்கு கீழ் இயங்கும் அமைப்புகள் மூன்று மாதங்களுக்குள் கிரிப்டோ கரன்சியில் செயல்படும் அமைப்புகளுடனான உறவைக் கைவிட வேண்டும் என்றார். அவர் மேலும் கூறியதாவது: டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாட்டு மத்திய வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. இப்போது இருக்கிற காகித பணத்துடன் சேர்த்து ரிசர்வ் வங்கியின் கிரிப்டோ கரன்சியையும் பயன்படுத்தலாம். இதனால் பணத்தாள் அச்சடிக்கும் செலவும், பண விநியோக சிக்கல்களும் குறையும் என்றார். முன்னதாக கடந்த நவம்பரில் கிரிப்டோ கரன்சிகளை , பொன்சி முறைகேட்டோடு அரசு ஒப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கிரிப்டோ கரன்சிகள் சட்டபூர்வமானது அல்ல என பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி அறிவித்தார். இதனால் ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் கிரிப்டோ கரன்சி வர்த்தக சேவையை விலக்கிக்கொண்டன. இதனைத் தொடர்ந்து 90 சதவீதம் அளவுக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு பிட்காயின் ரூ.10 லட்சம் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. பல லட்சம் ரூபாயை மக்கள் இதில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x