Published : 07 May 2024 04:03 PM
Last Updated : 07 May 2024 04:03 PM

தமிழ்நாடு முழுவதும் நகர கூட்டுறவு வங்கியில் புதிய மென்பொருளால் சேவை பாதிப்பு

கோவில்பட்டி: தமிழ்நாடு முழுவதும் நகர கூட்டுறவு வங்கியில் புதிய மென்பொருள் மாற்றப்பட்டு, சரிவர அது இயங்காததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 125 நகர கூட்டுறவு வங்கிகளும், இவற்றுக்கு 362 கிளைகளும் உள்ளன. நிரந்தர பணியாளர்கள் சுமார் 4 ஆயிரம் பேர், தற்காலிக பணியாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். ரிசர்வ் வங்கியின் கீழ் நகர கூட்டுறவு வங்கி இருந்தாலும், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பதிவாளர் தலைமையில் இந்த வங்கி இயங்குகிறது. இந்தவங்கிக்கென மாநில அரசு தனியாகநிதி கொடுப்பது இல்லை. வாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை பெற்று, அந்த தொகைகள் மூலம் கடன்கள் வழங்கி, அதன் வழியாக வட்டியை ஈட்டி வருகிறது.

வங்கியில் வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு, நகைக் கடன், சிறு தொழில் மற்றும் அரசு மானிய கடன்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் அனைத்தும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வங்கியின் மென் பொருள் மாற்றப்பட்டது. அதன் பின்னர், வங்கி சேவைகளை சரிவரசெய்ய முடியாமல், ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளருக்கு, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதிய மென்பொருள் காரணமாக, நகைக் கடன் வழங்குவதில் சிக்கல், லாக்கர் பதிவுகள்,சேமிப்பு கணக்கு சேவை, முதலீட்டுக்கான வட்டி வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதனால், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x