

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் 2023-24-ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக ரூ.39,619 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.8,242 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 60 ஆண்டு கால நீண்ட பயணத்தில் கடந்த நிதியாண்டில் அனைத்து பிரிவிலான வர்த்தகமும் குறிப்பிடத்தக்க அளவிலான சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதன் காரணமாகவே லாபம் இதுவரை இல்லாத அளவாக ரூ.39,619 கோடியாகி உள்ளது.
கடந்த நிதியாண்டில் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 97.551 மில்லியன் டன்னாகவும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 73.308 மில்லியன் டன்னாகவும் அதிகரித்தன. இந்தியாவுக்கு தேவையான எரிசக்தியை பூர்த்தி செய்து தருவதை நிறுவனம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
நீடித்த எரிசக்தி கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.5,215 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 1 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.