Published : 29 Apr 2024 06:25 AM
Last Updated : 29 Apr 2024 06:25 AM
சென்னை: தமிழகத்தில் வரத்து குறைவால் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மளிகை மற்றும் காய்கறி தேவைகளை வெளி மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களின் வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இது தொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வளாக வியாபாரிகள் கூறியதாவது: தற்போது துவரம் பருப்பு, பூண்டு, அரிசி ஆகிய பொருட்களின் விலைதான் உயர்ந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு தற்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் ரூ.140 வரை விலைகுறைந்து வந்த பூண்டு, தற்போது ரூ.250-க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. மேலும் அரிசி தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. ரூ.50-க்கு கீழ் அரிசியே இல்லை. சன்னரகம் புழுங்கல் அரிசி கிலோ ரூ.65 ஆகவும், பாசுமதி அரசி ரூ.105-க்கு மேல்விற்கப்படுகிறது. இவைஅனைத்தும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுவதால், அடக்கவிலையே அதிகமாகிவிடுகிறது.
உளுத்தம் பருப்பு ரூ.120-லிருந்து ரூ.135, கடலைப்பருப்பு ரூ.75-லிருந்து ரூ.85, சர்க்கரை ரூ.40-லிருந்து ரூ.42, குண்டு மிளகாய் ரூ.180-லிருந்து ரூ.245, நீட்டுமிளகாய் ரூ.180-லிருந்து ரூ.190, தனியா ரூ.105-லிருந்து ரூ.110 என விலை உயர்ந்துள்ளது. மற்ற பொருட்களில் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. இவ்வாறு வியாபாரி கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT