

ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ள (ஆகஸ்ட் 5) கடன் கொள்கையில் கடனுக்கான வட்டியைக் குறைக்காது என்றே தெரிகிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஆர்பிஐ வெளியிடும் இரண்டாவது கடன் கொள்கை இதுவாகும். முந்தைய கொள்கையிலேயே கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. இப்போதும் வட்டி குறைக்கப்படாது என்றே ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 8 சதவீத நிலையிலேயே நீடிக்கிறது. தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு இவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. வரும் நாட்களில் உணவுப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
மேலும் ஜூலை மாதத்தில் மழையளவு 23 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. இவை அனைத்தும் வட்டி குறைப்பு இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளன. பருவமழை சீரடைந்து உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் வரும்போதுதான், கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும். அதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டு டிசம்பரில்தான் உருவாகும் என அமெரிக்காவைச் சேர்ந்த தரச்சான்று நிறுவனம் மெரில் லிஞ்ச் கணித்துள்ளது.
தொழில்துறை வளர்ச்சிக்கு வட்டிக் குறைப்பு அவசியம் என்று தொழில் சம்மேளனங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.