Published : 06 Apr 2018 08:49 AM
Last Updated : 06 Apr 2018 08:49 AM

வணிக நூலகம்: வேண்டியதைப் பெறுவது எப்படி?

ரு நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும், எந்த மாதிரியான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், எவ்வாறு வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதையெல்லாம் சொல்லும் நிறைய புத்தகங்களைப் பார்த்திருப்போம். இதிலிருந்து மாறுபட்டு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானதை நிறுவனத்திடமிருந்தோ அல்லது ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளிடமிருந்தோ எவ்வாறு பெறுவது என்பதைச் சொல்கிறது புகழ்பெற்ற கிராஃபிக் டிசைனரான “போன்னி சிக்லெர்” அவர்களின் “டியர் கிளையன்ட்” என்னும் இந்தப் புத்தகம்.

அட்டிகஸ் பிஞ்சின் கூற்றுப்படி, “மற்றவரின் பார்வையிலிருந்து நீங்கள் விஷயங்களை கருத்தில் கொள்ளாதவரை, உங்களால் ஒருபோதும் உண்மையாக ஒருவரை புரிந்துகொள்ள முடியாது”. அதுபோலவே, தனிப்பட்ட திறனுடைய மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களுடன் இணைந்தோ அல்லது அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டோ செயல்படும்போது, அது அதிக பயனுள்ளதாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நபர்களுடன் பணிபுரிவது என்பது உண்மையிலேயே சிறந்த தருணமாக இருக்க முடியும் என்கிறார் ஆசிரியர்.

நேர்மையாக இருங்கள்!

உங்களின் தேவைக்காக ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் ஒன்று தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான விஷயம் இவ்வாறெல்லாம் இருக்கவேண்டும், அதில் இவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும் மற்றும் உங்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய நேரம் என அனைத்தையும் முன்னதாகவே அந்நிறுவனத்திடம் தெளிவாக, நேர்மையாக சொல்லிவிடுவது சிறந்தது என்கிறார் ஆசிரியர்.

மேலும், நிறுவன அதிகாரிகளுடனான மீட்டிங்கில் அனைத்திற்கும் தலையாட்டிவிட்டு, பிறகு அது சரியில்லை, இது சரியில்லை எனும்போது, அந்த இடத்தில் உங்களின் நேர்மைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கிறார். எதிர்மறை விமர்சனமாக இருந்தாலும்கூட, அதை உண்மையாக எடுத்துரைப்பதே ஆகச்சிறந்தது. இது உங்களுக்கு மட்டும் நன்மையானதல்ல, அந்நிறுவனத்திற்கும் அவர்களின் செயல்பாட்டில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்பாக அமையும்.

உங்களது பட்ஜெட், உங்களுக்கான சிக்கலான விஷயங்கள், உங்கள் தனிப்பட்ட திறன்கள், உங்கள் முன்னுரிமைகள், உங்களின் பயங்கள், உங்கள் கனவுகள், உங்களது நம்பிக்கை, நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை வெறுக்கிறீர்கள், உங்களுக்கு எது தெரியும், எது தெரியாது என அனைத்திலும் நேர்மையாக இருக்கவேண்டியது அவசியம். இதுவே மிகச்சிறந்த செயல்பாட்டினை பெறுவதற்கான உறுதியான வழிமுறை. இதற்கு மாறாக செய்யப்படும் அனைத்துமே நேரம், ஆற்றல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வீணடிக்கும் செயலே என்பதை மறந்துவிடக்கூடாது.

விருப்பம் என்ன?

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான தனிப்பட்ட விருப்பமும் முன்னுரிமையும் இருக்கவே செய்யும். ஒருவரது விருப்பம் அவரது பணியில் மிகப்பெரிய பங்குவகிக்கிறது. அதை அறிந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?, எது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்?, உங்களை ஈர்க்கும் விஷயம் எது? ஆகியவற்றை அடையாளம் காண்பதும், அறிந்துகொள்வதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் நம்பமுடியாத அளவில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நிச்சயமாக உங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கும், உங்களது நிறுவனம் அல்லது நீங்கள் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கும் இடையே வேறுபாடுகள் என்பது இருக்கவே செய்யும். ஆனாலும்கூட, உங்களின் தெளிவான புரிதலானது, உங்களது செயல்பாட்டினை அவர்கள் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.

நம்மால் அறிந்துகொள்ளப்பட்ட நமது விருப்பங்களை அப்படியே செயல்படுத்திவிட வேண்டுமா? என்றால், கண்டிப்பாக இல்லை. சூப்பர்மார்க்கெட்டில், பயணத்தில், தெருக்களில், ஹோட்டலில், சினிமா தியேட்டரில், மெடிக்கல் ஷாப்பில், இன்டர்நெட்டில், டெலிவிஷனில் என எல்லா இடங்களிலும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு அவற்றை ஆராய்ந்து, அதில் உங்களுக்கான தீர்மானத்தை முடிவெடுங்கள். அதாவது, உங்கள் விருப்பங்களில் எது செயல்பாட்டிற்கு உகந்தது?, எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது?, குறிப்பிட்ட பணிக்கு அல்லது சூழ்நிலைக்கு ஏற்றது எது? போன்றவற்றை கவனத்தில் கொண்டு இறுதி விருப்பத்தினை தேர்வு செய்யவேண்டும்.

நோக்கத்தில் தெளிவு!

உங்களது முதன்மையான நோக்கங்களின் மீதான தெளிவான புரிதல் என்பது முக்கியமானது. செயல்பாட்டிற்கு முன்னதாக அவற்றை அடையாளம் காணவேண்டியது அவசியம். நீங்கள் அடையவேண்டிய அல்லது வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டிய விஷயங்களின் லிஸ்டை தயார் செய்வதே முதல் பணி. விற்பனையை அதிகரிக்க முயல்கிறீர்களா? அல்லது உங்களது பிராண்டை பிரபலப்படுத்த வேண்டுமா? அல்லது உங்களது பிசினஸ் விரிவாக்கம் பெறவேண்டுமா? என பல குறிக்கோள்கள் உங்களது லிஸ்டில் இருக்கலாம். ஆயினும், அவற்றில் உங்களுக்கான முதன்மையான மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை தெளிவாக தேர்வுசெய்துகொள்ள வேண்டும். உங்களிடம் மூன்று முன்னுரிமைகளை விட அதிகமான குறிக்கோள்கள் இருக்குமேயானால், உண்மையில் நீங்கள் எந்த குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை என்கிறார் ஆசிரியர்.

பிரச்சினையை மட்டும் சொல்லுங்கள்!

உங்கள் நிறுவனத்தின் ஒரு பிரச்சினைக்கான தீர்வுக்காக வேறொரு நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ அணுகுகிறீர்கள். அங்கு உங்களது பிரச்சினையின் விவரங்களை மட்டுமே தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தீர்வானது அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று பரிந்துரை செய்துகொண்டிருக்கக்கூடாது என்கிறார் ஆசிரியர்.

இவ்வாறான செயல்பாடு, தீர்விற்கான பணியில் ஈடுபடும் குழுவினரிடம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்கவேண்டியது அவசியம். மேலும், அவர்களிடமிருந்து கிடைக்கபெறும் உங்களுக்கான தீர்வின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, சரியான தீர்வினை உங்களால் பெறமுடியாமல் போவதற்கான ஆபத்தும் இதில் உண்டு. பிரச்சினையைத் தீர்க்க சென்ற இடத்தில், அதற்கான தீர்வைப் பெற்று வரவேண்டுமே தவிர, பிரச்சினையை அதிகரித்துக்கொண்டு வரக்கூடாது அல்லவா!

ஊக்கத்தின் ஆற்றல்!

இதை நல்ல நேரங்களிலும், மோசமான தருணங்களிலும் கவனத்தில் வையுங்கள் என்று பரிந்துரைக்கிறார் ஆசிரியர். ஆக்கப்பூர்வமான நபர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் ஊக்கம். சிறு தவறு என்றாலும்கூட அதற்காகவே காத்திருந்தது போல, பொங்கி எழுபவர்களும், ஊக்கம் கிலோ என்ன விலை? என்று கேட்பவர்களும் நம்மிடையே உண்டு. அதே சமயம் தவறுகள் இயல்பானவை, தொடர்ந்து செயல்படுங்கள், உங்கள் மீது நிறைய நம்பிக்கை உள்ளது என்று ஊக்கப்படுத்துபவர்களும் உண்டு.

இவற்றையும் கவனியுங்கள்!

ஒவ்வொரு விஷயத்தின் மீதான தனிப்பட்ட கவனம், படைப்பாற்றல் மிக்கவர்களுடனான சந்திப்பின் முக்கியத்துவம், ஆக்கபூர்வ செயல்பாடுகளின் உண்மையான மதிப்பு, எதிர்பாராத விஷயங்களின் மீதான கவனம், சிக்கல்களின் தீர்விற்கான நடுநிலையான முயற்சிகள், கேள்விகளின் வாயிலாக அனைத்தையும் அறிந்துகொள்ளுதல், யூகிக்க முடியாத விஷயங்களில் திறந்த மனதுடன் செயல்படுதல், கருத்துகளை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், ஆகியவையும் கவனத்தில் வைத்து செயல்படவேண்டிய விஷயங்களாக ஆசிரியரால் சொல்லப்பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வமான பணியிட உறவுமுறைகளின் வாயிலாக மிகவும் பயனுள்ள வகையிலும் திறம்படவும் செயல்பட்டு, நமக்கு வேண்டியவற்றைப் பெறமுடியும் என்பதற்கான சிறந்த வழிகாட்டி இந்தப் புத்தகம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x