

நாமக்கல்: பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சில பகுதிகளில் வாத்துப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 1,175 கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6.35 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இதன் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 1 கோடி முட்டை வரை கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. அதுபோல் நாள்தோறும் இறைச்சிக்காக கோழிகளும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு லாரிகள் சென்று வருவதால் அதன்மூலம் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப்பண்ணையின் நுழைவு வாயிலில் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைத்து உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நடவடிக்கை ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப் படுகிறது என கோழிப் பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ச.உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தார். .
மேலும், கோழிப் பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு ஆட்சியர் உமா அறிவுறுத்தினார்.
இதனிடையே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட 47 அதிரடிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவில் உள்ளவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.