

ஓசூர்: பீன்ஸ் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை, ஓசூர் உழவர்சந்தைக்கும் மற்றும் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக, கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் ஓசூர் பகுதியில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. அதோடு, வெயிலின் தாக்கம் தொடர்வதால், பீன்ஸ் தோட்டங்களில் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்கெட்டில் ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்த ஒரு கிலோ பீன்ஸ் தற்போது வரத்து குறைவால், ரூ.100 முதல் ரூ.130 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.