தொழில் பள்ளிகள்: சாம்சங் - அரசு ஒப்பந்தம்

தொழில் பள்ளிகள்: சாம்சங் - அரசு ஒப்பந்தம்
Updated on
1 min read

இளைஞர்களுக்கு தொழில் கல்வியை அளிக்கும் நோக்கில் நாடு முழுவதும் தொழில் பள்ளிகள் தொடங்க மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கொரியாவைச் சேர்ந்த மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்குடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான திறன் படைத்த இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொழில் நிறுவனங் களின் ஒத்துழைப்புடன் இந்த கல்வி மையங்கள் ஏற்படுத்தப்படுவதாக மத்திய சிறுதொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்கல்வி அளிக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். இவ்விதம் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களில் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த தொழில் கல்வி மையத்தில் மொபைல் போன், டெலிவிஷன், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுது நீக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

இந்த தொழில் பயிற்சிக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாகும். மூன்று மாதங்களுக்கான இந்த பயிற்சிக்கான தொகை செலுத்த முடியாத ஏழை இளைஞர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மிஷ்ரா கூறினார். புது டெல்லி, புவனேஸ்வரம், லூதியானா, அகமதாபாத், ஹைதராபாத், ஔரங்காபாத், கொல்கத்தா, வாராணசி, மும்பை மற்றும் சென்னையில் இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in