மஞ்சள் மண்டிகளில் விவசாயிகள் படும் இன்னல்கள்

மஞ்சள் மண்டிகளில் விவசாயிகள் படும் இன்னல்கள்
Updated on
2 min read

கா

லை 8 மணி. பெருந்துறை சந்தையில் தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்பதற்காக முன்னதாகவே விவசாயிகள் தயாராகிவிட்டார்கள். பல்வேறு மஞ்சள் மாதிரிகளை சோதனையிட்டு மொபைல் செயலியின் வழியாக அவற்றை ஏலத்தில் எடுக்க வர்த்தகர்களும் குழுமியிருக்கிறார்கள்.

இது ஒரு முக்கியமான மாற்றம். சில ஆண்டுகளுக்கு முன்பு வாய்வழியாக ஏலம் கேட்பது இந்த மஞ்சள் மண்டிகளில் நடைமுறையில் இருந்தது. விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்பதற்கு ஒரு முழு நாளை செலவழிக்கவேண்டியிருந்தது.

இருப்பினும் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை, செம்மம் பாளையம் சந்தைகள் மற்றும் ஈரோடு விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சந்தை போன்றவை விவசாயிகளுக்கான சிறந்த இடங்களாக இன்னமும் மாறவில்லை.

மொபைல் செயலி வழியாக ஏலம் நடைபெற்றாலும்கூட ஒவ்வொரு மண்டியிலும் இ-ஏல முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. விவசாயிகளுக்கு கிடைக்கும் தொகை மற்றும் கட்டணத்திலும் வேறுபாடுகள் உள்ளன. ஏலத்துக்குப் பிறகான டிஜிட்டல் எடை இடும் முறையிலும் துல்லியத்தன்மை இல்லை.

இ-ஏல முறையில் பொருளுக்கான ஏலம் வர்த்தகர்களால் ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. பெருந்துறை சந்தையில் இதற்காக என்இஎம்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சந்தை தள செயலி பயன்படுத்தப்படுகிறது. செம்மம் பாளையம் சந்தை மற்றும் கருங்கல் பாளையத்திலுள்ள ஈரோடு விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சந்தையில் கோயம்பத்தூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சான் சாஃப்டின் செயலி பயன்படுத்தப்படுகிறது.

இ-ஏலத்தின் நோக்கம் என்பது விவசாயி மற்றும் வர்த்தகர் சந்தையில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதும் , வர்த்தகர்கள் கூட்டு சேர்வதைக் கண்டறிவதும், விலையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதும் ஆகும். பெருந்துறை மற்றும் கருங்கல் பாளையம் சந்தைகளில் விவசாயிகள் சந்தைக்குள் நுழைந்ததும் அவர்களது மஞ்சள் பைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்படுகிறது. செம்மம் பாளையத்தைப் பொறுத்தவரை குடோன் உரிமையாளர்கள் கமிஷன் முகவர்களாக செயல்பட்டு மஞ்சள் மாதிரிகளை எடுத்து வருகிறார்கள்.

இதன் பின்பு எடையிட நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மஞ்சளின் தரத்தை சோதிப்பதற்காக மாதிரிகளை வர்த்தகர்களிடம் தருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியதும் மொபைல் செயலி வழியாக வர்த்தகர்கள் ஏலம் கேட்கத் தொடங்குகிறார்கள். இது மூடிய வகையில் நடக்கும் ஏலமாகும். அதாவது ஒரு வர்த்தகர் என்ன தொகைக்கு ஏலம் கேட்கிறார் என்பது இன்னொரு வர்த்தகருக்குத் தெரியாது. சந்தைக்கு மொத்தமாக வந்துள்ள பொருட்கள், தான் பங்கெடுத்த ஏலத்தில் வெற்றியடைந்த வர்த்தகர், அந்த நாளின் ஒட்டுமொத்த ஏல வெற்றியாளர் போன்ற தகவல்கள் இந்த செயலியின் வழியாக வர்த்தகர்களுக்குக் கிடைக்கின்றன.

ஒருவேளை ஏலத்தில் கிடைத்த தொகை திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி பொருளை விற்க மறுக்கலாம். இந்தத் தகவலை சந்தை அதிகாரிகள் ஏலத்தில் வெற்றிபெற்றவரிடம் தெரிவிக்கவேண்டும். ஏலத்தில் கிடைத்த தொகையை விவசாயி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஏலம் அடுத்த கட்டமான எடையிடல் மற்றும் பணம் செலுத்தலை நோக்கி நகரும்.

அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்பவர் பொருளை வாங்க மறுப்பது மிகச் சாதாரணமாக நிகழும் சம்பவம் என செம்மம் பாளையம் விவசாயிகளும் தகவல் தெரிந்தவர்களும் தெரிவிக்கிறார்கள். அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்டவர் பொருளை வாங்க மறுத்தால் அது அதற்கு அடுத்த இடத்தில் உள்ளவருக்கு சென்றுவிடும். அதிகபட்ச தொகைக்குக் கேட்டவர் பொருளை வாங்க மறுப்பது விவசாயிகளுக்குக் கூடத் தெரியாமல் வர்த்தகர்களுக்குள்ளேயே மிக வேகமாக நடந்துவிடுவதாக சந்தையிலுள்ள நம்பந்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மஞ்சள் விவசாயிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவரான பி.கே. தெய்வசிகாமணியிடம் இது குறித்து கேட்டபோது இது வர்த்தகர்கள் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும், கண்டிப்பாக அனுமதிக்கப்படக் கூடாது என்றும் சொன்னார்.

தங்களிடம் தற்போது போதிய பணம் இல்லை, தவறான தொகையை அழுத்திவிட்டோம் போன்ற காரணங்களை வர்த்தகர்கள் சொல்வதாகவும், இரண்டாவது அதிக தொகையைக் கேட்பவருக்கு உடந்தையாக இவர்கள் செயல்படுவதாகவும் சந்தையிலுள்ள சிலர் தெரிவிக்கிறார்கள்.

என்இஎம்எல் நிறுவனத்தின் செயலியில் சந்தையில் தினமும் பொருட்கள் வர்த்தகமாகும் அடிப்படை விலையை மையமாக வைத்து அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகைக்கு மேல் வர்த்தகர்கள் ஏலம் கேட்டால் செயலி அதை நிராகரித்துவிடும். சான் சாஃப் செயலியில் அதிகபட்ச ஏலத்தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிக்கு குறுந்தகவலாக சென்றுசேரும் வசதி இருக்கிறது. கருங்கல் பாளையத்தில் செயல்படுத்தப்படும் இந்த முறை செம்மம் பாளையத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாடு முழுமைக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்பட்டு நாடு முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கெடுத்தால்தான் இந்த கூட்டு சேர்தலை தடுக்கமுடியும் என்கிறார் தெய்வசிகாமணி.

வாங்கிய பொருளின் மதிப்பில் ஒரு சதவீதத்தை சந்தைக் கட்டணமாக வர்த்தகர்கள் செலுத்தவேண்டும். வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு பையை எடையிடுவதற்கு 19 ரூபாய் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. குடோனில் பொருளை வைத்திருத்தல், பைகளைப் பிரித்தல் போன்றவற்றுக்கு விவசாயிகள் செலவிடும் தொகை தனி. மற்ற இடங்களில் எடையிடுவதற்கான தொகை வர்த்தகர்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. மஞ்சள் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்தக் கட்டணம் மற்ற விவசாயிகளுக்கு இல்லை, இது குறித்து பலமுறை முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை என்கிறார் ஈரோடு மஞ்சள் விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு செயலர் நஞ்சப்பன். கட்டணங்களுக்கான ரசீதும் விவசாயிகளுக்குத் தரப்படுவதில்லை.

ஒரு மஞ்சள் மூட்டையின் எடை 65 கிலோகிராம். அதன் பையின் எடை 1.5 கிலோகிராமாக கொள்ளப்பட்டு மொத்த எடை 66.5 கிலோ இருக்கிறதா என சந்தையில் எடையிடப்படுகிறது. ஆனால் சில வேளைகலில் 67 கிலோ மற்றும் 68 கிலோ இருக்கக்கூடிய பையின் எடையை வர்த்தகர்களுடன் கூட்டுசேர்ந்துகொண்டு எடையிடுபவர் 65 கிலோ என எடையிடுகிறார். எடையிடுதலை ப்ளூடூத் வழியாக செயலிக்கு அனுப்ப வகை செய்வதன் மூலம் இந்த மோசடியைத் தடுக்கலாம். ஆனால் இந்த வசதி செம்மம் பாளையம் மற்றும் பெருந்துறை சந்தைக்கு இன்னமும் கிடைத்தபாடில்லை.

rajalakshmi.nirmal@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in