

சேலம்: தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
கோடை காலம் என்பதால், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புளி அறுவடை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புளி மொத்த விற்பனையில் முக்கிய விற்பனை மையமாக இருக்கும் சேலம் லீ பஜாரில் உள்ள ஏல மண்டிகளுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புளி மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது.
இது குறித்து மொத்த வியாபாரி மனோகரன் கூறியது: “சேலம் லீ பஜாருக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின் தும்கூரு, சல்லிக்கரை, தாவணகெர, ஆந்திராவின் இந்துப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் புளி மூட்டைகளை வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
இங்குள்ள ஏல மண்டிகளில் நடைபெறும் விற்பனையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று, தரத்துக்கேற்ப விலையை நிர்ணயம் செய்து புளி மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். எனினும், சீசன் தொடங்கியபோது, வாரத்துக்கு 60 டன் வரை புளி வரத்து இருந்தது. தற்போது வாரத்துக்கு 10 முதல் 20 டன் அளவுக்கு தான் புளி வரத்து இருக்கிறது. வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது.
எனினும், வரத்து குறைவாக இருந்தாலும் புளி விலை குறைவாக இருக்கிறது. சீசன் தொடங்கியபோது சாதா புளி கிலோ ரூ.65 முதல் ரூ.85 வரை இருந்த நிலையில், தற்போது கிலோ ரூ.65- 75 என குறைந்துள்ளது. தோசை புளி கிலோ ரூ.75- 85 ஆக இருந்த நிலையில், அதன் விலையில் பெரிய மாற்றம் இல்லை. கறிப்புளி கிலோ ரூ.105- 140 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.90- 110 ஆக குறைந்துள்ளது என்றார். இதனிடையே, மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை புளி அறுவடை செய்யப்படும் என்பதால், மார்ச் மாதத்தில் இருந்து சேலம் லீ பஜாருக்கு புளி மூட்டைகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. குறிப்பாக, உரிய ஆவணங்கள் இன்றி, ரொக்கப்பணம், பொருட்கள் ஆகியவற்றை அதிகளவில் கொண்டு செல்வதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, சேலம் லீ பஜாருக்கு புளி வரத்து மிகவும் குறைந்துவிட்டதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: “நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதனால், உரிய ஆவணங்களின்றி பொருட்களையோ, பணத்தையோ கொண்டு செல்வது, வியாபாரிகளுக்கு சிக்கல் உள்ளது. ஆனால், புளியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அதனை விற்பனைக்கு கொண்டு வரும் எங்களிடம் தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பது போல ஆவணங்கள் இருப்பதில்லை. இதேபோல், பெரும்பாலும் ரொக்கமாக பணத்தை எடுத்து வர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டால், எங்களுக்கு தேவையின்றி வீண் அலைச்சல் ஏற்படும். எனவே, குறைந்த அளவே புளி மூட்டைகளை வாங்கிச் செல்கிறோம்.
இதேபோல், புளியை கொண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு புளி அறுவடை நீடிக்கும் என்ற நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், வரும் வாரத்தில் புளி விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.