

ஈரோடு: தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடி காரணமாக ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் ஆகிய பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க் கிழமை மாலை வரை வார ஜவுளிச் சந்தை நடக்கிறது. இங்கு, சாதாரண நாட்களில் ரூ.2 கோடிக்கும், பண்டிகைக் காலங்களில் ரூ.5 கோடிக்கும் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஈரோடு ஜவுளிச் சந்தை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்பதால், வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி ரகங்கள் தேக்கம்: இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு ஜவுளிச் சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் என்பதால், வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வாரச்சந்தையில் மொத்த கொள்முதல் செய்ய வருவது வழக்கம். பொதுவாக, ஜவுளிச் சந்தையில் ரொக்க கொள்முதல் செய்வதையே இரு தரப்பினரும் விரும்புவதால், ஜவுளிச் சந்தை நடக்கும் நாட்களில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்.
ரூ.2 லட்சம் முதல், ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக கொண்டு வந்து மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வர். தற்போது ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தால், தேர்தல் பறக்கும்படையால் பறிமுதல் செய்யப்படும் சூழல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளாலும், பறக்கும் படையினரின் கெடுபிடிகளாலும் கடந்த ஒரு மாதமாக ஈரோடு ஜவுளிச் சந்தையின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்த வார சந்தையில் மொத்த வியாபாரம் முற்றிலுமாக முடங்கி, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் தேங்கியுள்ளன. வெளி மாநில வியாபாரிகள் சிலர் மட்டும், ஆன்லைனில் பணம் செலுத்தி ஜவுளி கொள்முதல் செய்துள்ளனர். சில்லறை விற்பனை 10 சதவீதம் நடைபெற்றது, என்றனர்.