

சென்னை: தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிறுவுதிறன் 22,161 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதால், தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அதற்கான சாதகமான சூழல் நிலவுவதால், காற்றாலை, சூரியசக்தி மின்நிலையம் அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் மாநில வாரியாக சூரியசக்தி, காற்றாலை, நீர்மின் நிலையங்களின் நிறுவுதிறனை வெளி யிட்டுள்ளது.
உற்பத்தி நிறுவுதிறன் 8,211 மெ.வா: இதன்படி, தமிழகத்தில் தனியார்நிறுவனங்கள் 10,603 மெகாவாட்திறனில் காற்றாலை மின்நிலை யங்களை அமைத்துள்ளன. மேலும், 7,546 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள், 599 மெகாவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள், விவசாய நிலங்களில் 66 மெகாவாட் சூரியசக்தி மின்நிலையங்கள் ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்தமாக சூரியசக்தி மின்உற்பத்தி நிறுவுதிறன் 8,211 மெகாவாட்டாக உள்ளது.
தமிழகத்தில் 2,301 மெகாவாட்திறனில் நீர்மின் நிலையங்கள் உள்ளன. இதில், 25 மெகாவாட் டுக்கு குறைவான சிறிய நீர்மின் நிலையங்களின் பங்கு 123 மெகாவாட் ஆகும். சர்க்கரை ஆலைகளில் நிறுவுதிறன் 1,045 மெகா வாட்டாக உள்ளது.
அந்த வகையில், ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி நிறுவுதிறன் 22,161 மெகாவாட் என்ற அளவுடன் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் குஜராத் 27,462 மெகாவாட் திறனுடன் முதல் இடத்திலும், ராஜஸ் தான் 27,103 மெகாவாட் திறனுடன் 2-வது இடத்திலும் உள்ளன.