

புதுடெல்லி: ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள தரவுகளின்படி, இந்திய பங்குகள் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து மார்ச் வரையிலான காலத்தில் நிகர அளவில் 25 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன. அதேசமயம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு முதலீடு 5.3 பில்லியன் டாலர் அளவுக்கே இருந்தது.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நடுத்தர மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிப்பு ஆகியவை பெருநிறுவனங்களின் அதிக லாபம் ஈட்டலுக்கு அச்சாரமாக விளங்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் வேகம், பணவீக்கம் குறைந்து வருவது ஆகியவற்றின் காரணமாகஇந்தியா மற்றும் ஜப்பான் பங்குச்சந்தைகளின் குறியீடு வரலாற்றுசாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கார்ப்பரேட் சீர்திருத்தநடவடிக்கைகளும் ஜப்பான் சந்தையின் ஏற்றத்துக்கு மிகவும் சாதகமாகியுள்ளது.
சர்வதேச தர நிறுவனங்கள் வெளியிட்ட மதிப்பீடுகளின் எதிரொலியால் சீனாவின் சந்தை சரிவைசந்தித்துள்ளது. அதன்விளைவு,முதலீட்டாளர்கள் இந்திய - ஜப்பான்சந்தைகளை சிறந்த முதலீட்டுதளங்களாக தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த பான்கேர் பிரீவி நிறுவனத்தின் பங்குச் சந்தை பிரிவு தலைமை ஆய்வாளர் கீரன் கால்டர்கூறுகையில், “மொத்த உள்நாட்டுஉற்பத்தியின் வளர்ச்சியை நிறுவனங்கள் சிறந்த வருவாய் வளர்ச்சியாக மாற்றுவதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் மலிவான சீன பங்குகளை வாங்குவதை விட விலையுயர்ந்த இந்திய பங்குகளை வங்குவதிலேயே மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்கிறார்.
அடுத்தாண்டு எதிர்பார்க்கும் வருவாயை விட இந்திய பங்குகள்சுமார் 23 மடங்கு அதிகம் வர்த்தகம் ஆகின்றன. அதேநேரம், சீன பங்குகள் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அதன் உச்ச நிலையிலிருந்து 40 சதவீதம் சரிந்துள்ளது. 12 மாதங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் சீன சந்தையின் செயல்திறன் குறைவாகவே இருக்கும் என்பது சந்தை வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.